Wednesday, December 10, 2014

மொபைல் போன்களில் புத்தகம் படிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்: அப்துல்கலாம்

மொபைல் போன்களில், புத்தகங்கள் படிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.
புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் நிறுவனமும், டெல்நெட் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, அறிவு வளர்ச்சி, நூலகவியல் மற்றும் தகவல் கட்டமைப்பு என்ற தலைப்பிலான, மூன்று நாள் மாநாடு, புதுச்சேரி, ஓட்டல் ஆனந்தா இன்னில் நேற்று துவங்கியது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கவுரையில் பேசியதாவது: வரும் 2022க்குள், 50 கோடி பேரை திறன்மிக்கவர்களாக மாற்றுவதற்கு, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதை அடைய, நூலகங்கள் முக்கிய பங்கு வகிக்கும். நம் நாட்டில், 80 கோடி பேர், மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர்.
எனவே, மொபைல் போன்களில், புத்தகம் படிக்கும் வசதியை ஏற்படுத்தினால் பயன் உள்ளதாக இருக்கும். எம்லைப்ரரி எனப்படும், மொபைல் போன் நூலகத்தை அறிமுகம் செய்வது சாத்தியமானதுதான். தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால், மொழி பெயர்ப்பு வசதி மொபைல் போனில் ஏற்கனவே உள்ளது. எனவே, எம்லைப்ரரி மூலம், மற்ற மொழி புத்தகங்களையும், உடனுக்குடன் மொழிபெயர்த்து படிப்பதற்கு வாய்ப்பு உருவாகும்.
சாப்ட்வேர் மூலமாக, புத்தகங்களில் உள்ளதை படிக்கச் செய்து, கேட்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தலாம். இது, பார்வையற்றவர்களுக்கு மட்டுமல்ல, ஒரு மொழியை படிக்கத் தெரியாமல், பேசுவதை புரிந்து கொள்பவர்களுக்கும் உதவியாக இருக்கும். தினமும் ஒரு மணி நேரமாவது, நல்ல புத்தகங்களை படிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இதற்கு, ஒவ்வொரு வீட்டிலும் சிறிய நூலகத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்த நூலகத்தில், குழந்தைகளுக்கான புத்தகங்களும் இருக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் புத்தகங்களை படிப்பதை பார்த்து, குழந்தைகளும் படிக்க ஆரம்பித்து விடுவர். அதுபோல படிக்க ஆரம்பித்தால், ஆசிரியர்களாக, விஞ்ஞானிகளாக, பொறியாளர்களாக வர வாய்ப்புள்ளது, என்றார்.

No comments:

Post a Comment