Wednesday, October 9, 2013

"சைபர் கிரைம்" குறித்து 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

சைபர் கிரைம்" எனப்படும், இணையவழி குற்றங்களில் இருந்து, மாணவர்களை பாதுகாப்பது குறித்து, 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்ககமும், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனமும் ஏற்பாடு செய்துள்ளது.

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சமுதாய விழிப்புணர்வு குறித்தும், "சைபர் கிரைம்" நடவடிக்கைகளில் இருந்து, மாணவர்களை பாதுகாப்பது குறித்தும், 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு, படிப்படியாக பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளது. முதல் கட்டமாக, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான, 120 ஆசிரியர்களுக்கு, சென்னையில், நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
நாளை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, 120 ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர் கல்வி நிறுவன பேராசிரியர்கள், பல்வேறு துறைகள் சார்ந்த நிபுணர்களைக்கொண்டு, இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியைப் பெறும் ஆசிரியர், மாவட்டங்களுக்கு சென்று, பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர். இப்படியே, 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படும்.
பின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவர். "சைபர் கிரைம்" குறித்து, டி.எஸ்.பி., வெங்கடாசலபதி, நேற்று, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன் கூறுகையில், "இணையதளத்தை, ஆக்கப்பூர்வமான முறையில், எப்படி பயன்படுத்துவது, மொபைல் போன்களை, எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும், இணையதள ஆபத்துகளில் இருந்து, சிக்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.

No comments:

Post a Comment