Tuesday, October 8, 2013

மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் : முதல்வர் உத்தரவு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்  கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டத்தை அறிமுகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் தாங்கள் கற்கும் கல்வியுடன், பொது அறிவான தாங்கள் வசிக்கும் மாவட்டம், மாநிலம், நாடு பற்றிய விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த அறிவு அவர்களுக்கு உயர் கல்வி பயிலும் போதும், பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். இதனை அறிந்துக் கொள்ள மிகவும் உதவிகரமாக இருப்பது வரைப்படங்களேயாகும்.  எனவே, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும்  3,246 அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 3 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான 48,247 வகுப்பறைகள் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள  ஒரு லட்சம் வகுப்பறைகள் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து  247 வகுப்பறைகளுக்கும் தேசிய வரைபடம், தமிழ்நாடு வரைபடம் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வரைபடம் என மூன்று வரைபடங்கள் வாங்கி மாட்டுவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக  11 கோடியே 56 லட்சத்து 32 ஆயிரத்து 660 ரூபாய் செலவிட அனுமதி வழங்கியுள்ளார்.
கணினியின் இன்றியமையாத் தன்மையையும், தற்பொழுது பெரும்பான்மையான பணிகள் கணினியைச் சார்ந்தே அமைந்துள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வழியில் கல்வி வழங்கி, தமிழகத்தில் கணினிப் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகின்றார்.
அந்த வகையில், மாணாக்கர்களுக்கு கணினி வழியாக கல்வி கற்பித்து அவர்களின் புரிதல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘SMART CLASS ROOM’ என்ற புதிய தொழில்நுட்பத்தினை  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்  கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  இந்த திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் ஏற்கெனவே இருக்கும் வகுப்பறைகளில் ஏதேனும் ஒரு வகுப்பறை (20’x20’) ஸ்மார் கிளாஸ் ரூம்களாக மாற்றியமைக்கப்படும்.  இத்திட்டத்தின்படி கல்வி கற்பிக்க ஆர்வமுள்ள, இத்துறைப் பள்ளிகளில் ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியர்களில், ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும்.
 ஒவ்வொரு பள்ளியிலும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைப்பதற்கு தேவையான கணினி உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்கிட  ஒரு பள்ளிக்கு 5,05,000 ரூபாய் வீதம் 100 பள்ளிகளுக்கு 5 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment