Wednesday, October 16, 2013

15 ஆண்டுகளாக மூடப்பட்ட அரசுப்பள்ளி திறப்பு

பொள்ளாச்சி அடுத்த பாலமநல்லூரியில், 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அரசு துவக்கப்பள்ளி, மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் பாலமநல்லூர் பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது.
தொழில் ஏதும் இல்லாததால், இங்கு வசித்து வந்த மக்கள் கடந்த 1998ம் ஆண்டு ஊரை காலி செய்து சென்றதாக கூறப்படுகிறது. குழந்தைகள் இல்லாததால் அங்கு செயல்பட்டு வந்த துவக்கப்பள்ளி மூடப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, சமீபத்தில் கலெக்டர் உத்தரவின் பேரில், இப்பகுதியில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன. தற்போது இங்கு 600-700 மக்கள் குடியிருப்பு அமைத்து வசித்து வருகின்றனர்.
பள்ளி மூடப்பட்டதால், மாணவர்கள் கஞ்சம்பட்டி, நாட்டுக் கல்பாளையம், பக்கோதிபாளையம், மாக்கினாம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, 2-3 கி.மீ., நடந்து சென்று படித்து வந்தனர். இதற்கிடையில், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பூம்பாவை, மூடப்பட்ட பள்ளி குறித்து, கடந்தாண்டு தொடக்க கல்வி இயக்குனருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து,15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அரசு துவக்கப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பூம்பாவை கூறியதாவது: இப்பள்ளி கடந்த 14ம் தேதி முதல் திறந்து செயல்பட்டு வருகிறது. நாட்டுக்கல்பாளையம், கஞ்சம்பட்டி, மாக்கினாம்பட்டி, பக்கோதிபாளையம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வந்த பாலமநல்லூரை சேர்ந்த 34 மாணவர்களில், 28 பேர் மீண்டும் பழைய பள்ளிக்கே திரும்பியுள்ளனர்.
1-5ம் வகுப்பு வரை சேர்ந்துள்ளனர். அவர்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்களிடம், மாற்றுச்சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செம்பாகவுண்டர் காலனி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த ஒரு இடைநிலை ஆசிரியர், இங்கு பணியமர்த்தப்பட்டுள்ளார். தலைமையாசிரியர் பணியிடம் கலந்தாய்வின் மூலம் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment