Wednesday, October 16, 2013

சிறப்பு அனுமதி: குழந்தைகளை இன்று பள்ளியில் சேர்க்கலாம்

இன்று விஜயதசமி வழிபாடு என்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க அனுமதிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி, குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில், குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அங்கன்வாடி மையங்களில் பராமரிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, ஐந்து வயது பூர்த்தியானால் அருகில் உள்ள துவக்கப்பள்ளியில் அந்த குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க, அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் தேதியில் இருந்து செப்டம்பர் 30ம் தேதி வரை ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்.
ஆனால், முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, குழந்தைகளின் வயதுக்கேற்ற வகுப்புகளில் சேர்க்க அனைவருக்கும் கல்வித் திட்டம் அனுமதிக்கிறது. குறிப்பாக ஐந்து வயது பூர்த்தியானால், முதல் வகுப்பில் சேர்க்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், நேற்று, ஆயுதபூஜை வழிபாட்டை தொடர்ந்து, இன்று (அக்., 14ம் தேதி) விஜயதசமி (சரஸ்வதி வழிபாடு) என்பதால் ஐந்து வயதான குழந்தைகளை முதல் வகுப்பிலும், மூன்று வயது முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் அங்கன்வாடி மையத்தில் சேர்க்கலாம்.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: "குழந்தைகளின் இடை நிற்றலை தவிர்க்க ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இன்று விஜயதசமி என்பதால், ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளை அரசு துவக்கப்பள்ளியில் சேர்க்க அனுமதிக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment