Tuesday, October 29, 2013

அதிக கட்டணம் வசூலிக்கும் சிறுபான்மை பள்ளிகள் மீது புகார்

சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு மணவர் பெற்றோர் நலச்சங்க நிர்வாகிகள், கட்டண நிர்ணய குழு தலைவரிடம், நேற்று புகார் அளித்தனர்.

சங்க தலைவர், அருமைநாதன் மற்றும் நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்ட பெற்றோர், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, கட்டண நிர்ணய குழு அலுவலகம் முன், நேற்று திரண்டனர். சங்க நிர்வாகிகள் மற்றும் சில பெற்றோர் மட்டும், கட்டண நிர்ணய குழு தலைவர், சிங்காரவேலுவை சந்தித்து, சிறுபான்மை பள்ளிகள் மீதான புகார் மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: சிறுபான்மையினர் உரிமையை காட்டி, கட்டண நிர்ணய குழுவிடம், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் உரிமையை, சிறுபான்மை பள்ளிகள் கேட்டு பெற்றுள்ளன. இதனால், பெற்றோர், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல சிறுபான்மை பள்ளிகளில், 100 சதவீத அளவுக்கு, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற பள்ளி மாணவர்களை விட, சிறுபான்மை பள்ளிகள், கூடுதல் கட்டணம் வசூலிப்பது, எந்த வகையிலும், நியாயம் இல்லை. சிறுபான்மை பள்ளிகளை நடத்துபவர்கள், சிறுபான்மையினருக்கான, இதர சலுகைகளை வேண்டுமானால் அனுபவிக்கட்டும். ஆனால், அதிக கட்டணம் வசூலிப்பது சரியல்ல. இந்த விவகாரத்தில், கட்டண நிர்ணய குழு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. பெற்றோர் கோரிக்கை குறித்து, ஆய்வு செய்வதாக, கட்டண நிர்ணய குழு தலைவர்,சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment