Friday, October 25, 2013

பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு: கேள்விக்குறியான இலவச கட்டாயக் கல்வி

குமாரபாளையம் பகுதியில்,குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பிச்சை எடுக்க வைப்பதால் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இலவச கட்டாயக் கல்வியை முழுமையாக அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமை விதிமுறைகள் 2011ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி ஆறு முதல் 14 வயதுடைய குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.
ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் துவக்கப்பள்ளி, மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் நடுநிலைப்பள்ளி அமைக்க வேண்டும். இடை நிற்றல் குழந்தைகளை அடையாளம் கண்டு அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இடம் பெயர்ந்த குழந்தைகள் அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் பொருட்டு வாசிப்பு திறன், எழுதும் பழக்கம், கேட்கும் திறன் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். மேலும், புத்தக சுமைகளை குறைக்க முப்பருவ பாடத்திட்டம், பெண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம், பாலின வேறுபாட்டை களைந்து, குழந்தைளை பள்ளியில் சேர்த்தல், உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தைகளின் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களை கோடிக்கணக்கில் செலவு செய்து செயல்படுத்தி வந்தாலும் இடைநிற்றல், இடம் பெயர்தல், பள்ளிக்கு செல்லாமை, பெற்றோர் விழிப்புணர்வு இல்லாமை ஆகியவற்றால், குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தல், புத்தகங்கள் விற்க வைத்தல், சாகச செயல்களில் ஈடுபடுத்தி வருவாய் ஈட்டல், குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தல் ஆகிய குற்றங்கள் நடந்து கொண்டு உள்ளன. அதனால், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், தனிமனித மேம்பாடு, சமூக சீரழிவு ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிக்க மற்றும் பாதுகாக்க சைடு லைன், ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ், சிறார் நீதிமன்றம், ஆலோசனை மையம், காப்பகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் குழு, தேசிய குழந்தைகள் மையம் என பல பிரிவுகள் இருந்தும் தெருக்களில் பிச்சை எடுக்க வைப்பது, தின்பண்டங்கள் விற்பது, சாகச செயல்களில் ஈடுபடுத்துவது அதிகமாக நடந்து வருகிறது.
குமாரபாளையம் அடுத்த சின்னப்பநாய்க்கன்பாளையத்தில், நூலக வளாகத்தில் ஒரு சில குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களது குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதில்லை. அதனால், குழந்தைகள் அப்பகுதியில் உள்ள பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பிச்சை எடுக்கின்றனர். இரவு நேரங்களில் அப்பகுதியில் சமூக விரோத செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, "சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு நூலக வளாக ஆக்கிரமிப்பை அகற்றி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment