Tuesday, October 8, 2013

மதுரையில் 54 மடிக்கணினிகள் மாயம்: கல்வித்துறை உத்தரவால் திருப்பம்

மதுரையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், அரசின் 54 இலவச மடிக்கணினிகள் மாயமான சம்பவத்தில், கல்வித் துறை பிறப்பித்த திடீர் உத்தரவால், திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தல்லாகுளம் முதன்மை கல்வி அலுவலர் வளாகத்தில், டி.இ.ஓ., அலுவலக ஆய்வாளர் அறையில், மாணவர்களுக்கு வழங்க, 100க்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில், 54 மடிக்கணினிகள் மாயமானது, பிப்., 14ல் தெரிய வந்தது. 20 ஊழியர்களின் கைரேகைகளை எடுத்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இப்பிரச்னையில், அலுவலக உதவியாளர்கள் பாண்டியராஜன், பால்சாமி, வாட்ச்மேன் முத்துக்குமார்  இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின், டி.இ.ஓ., அலுவலக உதவியாளரும்  இடைநீக்கம் ஆனார். மாவட்ட ஆய்வாளர் ஒருவரிடம் விளக்கம் கேட்டு, பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த தேவராஜன், நோட்டீஸ் அனுப்பினார்.
போலீசார் விசாரித்து வரும் நிலையில், இயக்குனர் அலுவலகத்தில் இருந்து சி.இ.ஓ., அலுவலகத்திற்கு வந்த ஒரு உத்தரவில், "மாயமான மடிக்கணினிகளுக்கு தலா ரூ.14 ஆயிரம் வீதம்  இடைநீக்கம் ஆன ஊழியர்களிடம் வசூல் செய்யவும்" என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருடு போன  மடிக்கணினிகளுக்கான பணத்தை வசூலிக்க,இயக்குனர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது. யார், யாரிடமிருந்து எவ்வளவு வசூலிக்க வேண்டும், என்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும், என்றார்.
போலீஸ் விசாரணை ஒரு புறம் நடக்கும் நிலையில், கல்வித் துறையின் திடீர் உத்தரவால், வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment