Wednesday, October 16, 2013

பள்ளி மாணவர்களுக்கான ஒரு புதிய வெளிநாட்டுக் கல்விமுறை

ஒரு சராசரி இந்திய வகுப்பறையில், உரையாற்றுதல் பாணியிலான கற்பித்தல் முறையே, நடைமுறையில் உள்ளது. இம்முறையில், ஆசிரியர் பாடம் குறித்து விளக்குவதை மாணவர்கள் ஆழ்ந்து கவனித்து, குறிப்பெடுத்துக் கொண்டு, தேர்வெழுதி, அடுத்த நிலைக்கு செல்கிறார்கள்.

சில மாணவர்கள், விளையாட்டு, விவாதங்கள் மற்றும் இதர திறன்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இருந்தாலும், பல மாணவர்களுக்கு கல்வி மேம்பாடு என்பது ஒரு சார்பு உடையதாகவே இருக்கிறது. இந்நிலையில் இன்று, பல பள்ளிகள், தங்களின் கற்பித்தல் செயல்பாட்டில் பல புதிய நடைமுறைகளை சேர்த்துக்கொள்ள தொடங்கியுள்ளன.
அத்தகைய புதிய முறைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று எதுவெனில், ஸ்வீடன் நாட்டை அடிப்படையாகக் கொண்ட KUNSKAPSSKOLAN EDUCATION (KED) என்பதாகும். இதுதொடர்பான ஒரு பள்ளி வளாகம், டெல்லி அருகிலுள்ள குர்கோனில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இப்பள்ளி திறக்கப்பட்டது. தற்போது இங்கே, LKG முதல் 6ம் வகுப்பு வரை சேர்த்து, மொத்தமாக 265 மாணவர்கள் பயில்கிறார்கள்.
தனித்துவமான அணுகுமுறை
இந்த KED முறையிலான இதர பள்ளிகள், ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ளன. குர்கோனில் உள்ள பள்ளியானது, வகுப்பறை பயிற்சியுடன் சேர்த்து, தனிப்பட்ட மேம்பாட்டிலும் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்களிடம், மொத்தம் 5 நோக்கங்களைப் பற்றிய புரிதல் ஏற்படுத்தப்படும்.
இலக்கு நிர்ணயித்தல், பொறுப்பேற்றுக் கொள்ளுதல், நேர மேலாண்மை, திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவையே அந்த 5 நோக்கங்கள். அதேசமயம், இந்த 5 நோக்கங்களை மாணவர்களிடையே உட்செலுத்துவதென்பது, ஒரு நீண்ட, திட்டமிட்ட மற்றும் பள்ளி காலம் முழுமைக்குமான ஒரு செயல்பாடாகும்.
தேசிய வாரியத்தைப் பின்பற்றுதல்
இந்த KED முறையின் ஒரு பெரிய சிறப்பம்சம் என்னவெனில், இதன் கற்றல் செயல்பாடு, தேசிய கல்வி வாரியத்திற்கு ஒத்திருப்பதாகும். ஆகையால், இந்தியாவில் இப்பள்ளி, CBSE கல்விமுறையையே பின்பற்றுகிறது. அதேசமயம், கற்றலானது, விரிவுரைகளின் கலவை, செமினார்கள், வொர்க்ஷாப் மற்றும் தனிப்பட்ட கோச்சிங் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
சொந்த முயற்சியில் கற்றல்
இந்த KED முறையில், அனைத்து மாணவர்களும் ஒரேவிதமான கற்றல் செயல்முறையைக் கொண்டிருக்க வேண்டுமென வற்புறுத்தப்படுவதில்லை. ஒவ்வொருவரின் தனித்திறமைக்கு ஏற்ப, இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், திறமையான மாணவர்கள் வேகமாக கற்றுக்கொள்ளவும், சற்று மந்தமான மாணவர்கள், நேரம் எடுத்துக்கொண்டு கற்கவும் வழியேற்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாணவரும், தனது ஆசிரியரின் உதவியுடன், குறுகியகால மற்றும் நீண்டகால இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு செயல்படவும் வழியுண்டு.
கற்றலை எளிமைப்படுத்தல்
இம்முறையில், கற்பித்தல் என்பதைத் தாண்டி, ஆசிரியரின் பங்கு அளப்பரியதாக உள்ளது. பல்வேறான நிலைகளில் கற்பித்தல் நிகழ்கிறது. இந்த வகையில், காலப்போக்கின்(over a period of time) அடிப்படையில் ஒரு மாணவரின் தனிப்பட்ட மேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றை கவனித்து செயல்படும் ஒரு தனிப்பட்ட கோச் என்பது வரைக்கும் ஒரு ஆசிரியர் செயல்படுகிறார். வெறுமனே, அகடமிக் ஆண்டை முடித்தல் என்பதாக அவரின் பணி சுருங்கி விடுவதில்லை.
Personal Coaching செயல்பாட்டின்போது, வாராந்திர இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுமாறு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதை மேற்கொள்ளக்கூடிய ஆலோசனை மற்றும் உதவிகளை, தங்களின் ஆசிரியர்களிடமிருந்து அவர்கள் பெறுகிறார்கள். சுய இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு செயல்படுவதின் மூலம், மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையும், பெருமிதமும் ஏற்படுகிறது.
Lecture செயல்திட்டத்தை தாண்டி, ஒரு மாணவரை தனிப்பட்ட முறையில் அவதானித்து, அவரின் வளர்ச்சியை தொடர்ச்சியாக கண்காணிக்கும் பணியை ஆசிரியர் மேற்கொள்கிறார். இதன்மூலம், பெற்றோர்களின் உதவி இல்லாமலேயே, மாணவர்கள், தங்களின் சிறப்பான கல்வி செயல்பாட்டை மேற்கொள்ள முடிகிறது. ஏனெனில், பெற்றோரின் வேலையை, இங்கே, ஆசிரியர் செய்துவிடுகிறார்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
மாணவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும் மற்றும் இதை செய்யக்கூடாது என்றெல்லாம் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்த முடியாது. இலக்கு நிர்ணயித்தில் செயல்பாட்டில் இது ஒரு முக்கியமான தேவை. ஏனெனில், அந்த செயல்பாட்டைப் பொறுத்தவரை, மாணவர்கள், தங்களை உற்சாகப்படுத்திக் கொள்வதுதான் முக்கியமானது.
மனப்பாடம் செய்தல் மற்றும் அனைத்தையும் திணித்தல் போன்ற பழைய கல்வி செயல்பாடுகளுக்கு இங்கே வேலையில்லை. எனவே, இந்த ஆசிரியர் பணிக்கு தகுதியான ஆட்களைக் கண்டறிவது, பெரிய சவாலான விஷயமாக உள்ளது. மேலும், இந்த புதிய கல்வி முறைக்கு ஆசிரியர்களை பக்குவப்படுத்தும் விதத்தில், அவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டியுள்ளது.
மாதம் இருமுறை ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டாலும், கற்றல் மற்றும் மேம்பாடு ஆகியவை, தினசரி என்ற நிலையில் நடைபெறுகிறது. இப்போதைக்கு, CBSE வாரியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் இந்த KED கல்வி முறையில் நம்பிக்கையுள்ள இதர நிபுணர்கள், ஆசிரியராக பணியாற்ற வருகிறார்கள். இக்கல்வி முறைக்கான ஆசிரியரை தேர்வு செய்ய, சைக்கோமெட்ரிக் தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் இரண்டு நிலைகளிலான நேர்முகத் தேர்வு ஆகிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
சுமையில்லாத புத்தகப் பை
இந்த KED கல்வி முறையில், மாணவர்கள் பிற கல்வி முறைகளைப் போன்று, பொதி சுமக்க வேண்டிய அவசியமிருப்பதில்லை. ஏனெனில், 3ம் வகுப்பு முதற்கொண்டு, மாணவர்கள் tablets பயன்படுத்த தொடங்குகிறார்கள். முழு பாடத்திட்டம் மற்றும் படிப்பு உபகரணங்கள் ஆகியவை, learning portal -ல் கிடைக்கின்றன.
எதில் எழுதி பயிற்சி பெறுகிறார்களோ, அந்த workbook -களை மட்டும் மாணவர்கள் கொண்டு சென்றால் போதுமானது. மேலும், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில், இந்த கல்விமுறையில் மாணவர்கள் பின்பற்றும் நடைமுறைகளையும், போர்டல் மூலமாக, இந்தியாவில் படிக்கும் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும், மாணவர் ஒவ்வொருவர் மீதும் காட்டப்படும் தனிப்பட்ட அக்கறை மிகவும் முக்கியமான ஒன்று. இதில் இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில், இந்த கல்விமுறையில் சேரும் மாணவர்கள் அனைவருமே, மேல்தட்டு மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.
அகடமிக் அக்கறை
KED கல்வி முறையில், மாணவர்களின் வாழ்க்கைத் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தவகையில், பல பெற்றோர்களுக்கு பயம் ஏற்படுகிறது. என்னவெனில், தங்களின் பிள்ளைகள் பாடரீதியாக பலவீனப்பட்டு விடுவார்களோ, மதிப்பெண்களில் பின்தங்கி விடுவார்களோ, இதனால், அவர்களின் எதிர்கால அகடமிக் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமோ? என்பதுதான்.
ஆனால், இந்த பயம் தேவையில்லை என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இந்தக் கல்வி முறையில் பயின்ற பல மாணவர்கள், கல்வியில் சிறந்து விளங்கி, உலகின் பல புகழ்பெற்ற பல்கலைகளில் இடம்பெற்றுள்ளார்கள். இக்கல்வி முறையானது, ஒட்டுமொத்த திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உள்ளதால், அகடமிக் செயல்பாடுகளின் மீதான அக்கறை விட்டுக்கொடுக்கப்பட மாட்டாது என்கிறார்கள் அவர்கள்.

No comments:

Post a Comment