Sunday, October 13, 2013

6 வயதில் சர்வதேச நீச்சல் போட்டி; நெல்லை மாணவி சாதனை

ஆறு வயதான பள்ளி மாணவி, சர்வதேச அளவில் சைப்ரஸ் நாட்டில் நடந்த நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கெடுத்து சாதனை படைத்தார்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீ ஜெயேந்திரர் மெட்ரிக் பள்ளியில் முதலாம் வகுப்பு பயிலும் மாணவி திவ்யபிரபா 6, நீச்சலில் சிறந்து விளங்குகிறார். மாவட்ட அளவிலான போட்டிகள், மாநில, தேசிய போட்டிகளை கடந்து அண்மையில் சைப்ரஸ் நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான நீச்சல் போட்டியில், 13வது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். போட்டிகள் முடித்து திரும்பிய மாணவியை, பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தாளாளர் ஜெயேந்திரன், முதல்வர் ஜெயந்தி ஆகியோர் பாராட்டினர்.
மாணவி, நீச்சல் போட்டிகளில் ஆர்வமாக பங்கெடுப்பது குறித்து அவரது தாயார் ஸ்ரீரெங்க நாச்சியார் கூறியதாவது: திவ்யபிரபா, நான்கு வயதாக இருக்கும்போது ஏதாவது விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தோம். நீச்சலில் ஆர்வம் இருந்தது. எனவே நெல்லையில் உள்ள அரசு விளையாட்டுப்பள்ளி நீச்சல் குளத்தில் பயிற்சிக்கு சென்றார்.
ஆறு வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான பின்நோக்கி நீச்சல், வண்ணத்துபூச்சி நீச்சல், பிரெஸ் ஸ்ட்ரோக் உள்ளிட்ட போட்டிகளில் பங்கெடுத்து வெங்கலப்பதக்கம் வென்றாள். இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து மாவட்ட, மாநில போட்டிகளில் பங்கெடுத்து வந்தாள். கோவா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கெடுத்து நான்காம் இடத்தை பெற்றாள்.
அண்மையில் சர்வதேச அளவில் சைப்ரஸ் நாட்டில் நடக்கும் நீச்சல் போட்டிகள் குறித்து அறிந்தோம். இதற்கான தேர்வுகள் புனேயில் நடந்தது. சைப்ரஸ் நாட்டில் லிமஷாயி என்ற இடத்தில் கடந்த ஐந்தாம் தேதி முதல் ஏழாம் தேதி வரையிலும் நடந்த போட்டிகளில் பங்கெடுத்தாள். முதலில் 500 மீட்டர் ஓட்டப்போட்டி, பின்னர் கடலில் 50 மீட்டர் தூரம் நீச்சல், தொடர்ந்து வெளியே வந்து 500 மீட்டர் ஓட்டபோட்டி என்ற பையத்தேல் போட்டியில் பங்கேற்றாள்.
பங்கேற்றவர்களில் 13வது இடத்தை பிடித்தாள். போட்டியில் பங்கேற்றவர்களில் வயதில் குறைந்தவள் திவ்யாதான். தற்போது ஆறரை வயது ஆகிறது. திவ்யா பிரபா, நீச்சலில் தொடர்ந்து பயிற்சி பெற்று சர்வதேச அளவில் சாதனைகள் படைக்க விரும்புகிறாள். பதக்கங்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் என அவள் சுமக்க முடியாத அளவுக்கு பாராட்டுக்களை பெற்றிருக்கிறாள்.
தினமும் காலை 5.30 மணிக்கு படுக்கையில் இருந்து எழும் திவ்யா, அரைமணிநேரம் யோகா, ஆறு முதல் எட்டுவரை நீச்சல் பயிற்சி, பின்னர் பள்ளி, மாலையில் பாட்டுவகுப்பு, பரதநாட்டியம், இரவு எட்டு மணிவரை நீச்சல் பின்பு இரவில் படிப்பு என அவரது பொழுதுகள் அடுத்தடுத்து திட்டமிட்டு செல்கிறது. ஆறு வயதிலேயே சர்வதேச அளவை பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.. இன்னும் சாதனைகளை எட்டிப்பிடிக்க வயது இருக்கிறது. இதற்காக நாங்களும் உற்சாகமூட்டினோம். சைப்ரஸ் நாட்டில் நடந்த போட்டிகளுக்கு சென்றுவர விமான செலவு, ஓட்டல் செலவு என ஐந்தரை லட்சம் ரூபாய் சொந்தமாக செலவு செய்தோம் என்றார்.
இதே சர்வதேச அளவில் பங்கெடுக்க வாய்ப்பிருந்தும், தஞ்சாவூர் மாணவி நிதி வசதியில்லாததால் பங்கெடுக்கவில்லை என தெரிவித்த, திவ்யா பிரபாவின் தாயார் ஸ்ரீரெங்க நாச்சியார், தமிழ், ஆங்கிலம், குற்றவியல், சைக்காலஜி, உள்ளிட்ட ஆறு துறைகளில் முதுகலை பட்டம் பயின்றுள்ளார். தூத்துக்குடி ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர். அதே பகுதியில் உள்ள கருங்குளத்தை சேர்ந்த ஜெகன் செல்வக்குமாரும், பள்ளியில் பயிலும் போது காதலித்து, பின்னர் கலப்பு திருமணம் செய்துகொண்டனர்.
ஜெகன் செல்வக்குமார், ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவர். சொந்தமாக தொழில் செய்கிறார். சட்ட படிப்பையும் மேற்கொண்டு வருகிறார். திவ்யா பிரபாவுக்கு ஜெகத்திரியா 4, என்ற தங்கை உள்ளார். ஸ்ரீரெங்க நாச்சியார், ஐ.ஏ.எஸ்., தேர்வெழுத சிவில் பயிற்சிக்கு சென்று வருகிறார். இவர்களது முயற்சியும், ஊக்கமுமே ஆறு வயதே ஆன திவ்யா பிரபாவை, சர்வதேச போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

No comments:

Post a Comment