Tuesday, October 8, 2013

கற்றல் குறைபாடு கண்டறிய இன்று முதல்கட்ட தேர்வு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை ஆரம்பநிலையில் கண்டறிய மாநில அளவிலான தேர்வு கோவை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 பள்ளிகளில் இன்று நடக்கிறது. மாநிலம் அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் இரண்டு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வுகள் நடக்க உள்ளன.

எழுத்து மற்றும் வாய்மொழி என்ற இரு நிலைகளில் தேர்வுகள் நடக்கும். இதற்கான தேர்வு முறைகளை தேசிய மனநல மற்றும் ஊனமுற்றோர்களுக்கான நிறுவனம் சார்பில் "திறன் தேர்வு தொகுப்பு" வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட எஸ்.எஸ்.ஏ., தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
"ஆரம்ப நிலையில் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிந்து அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கும் பட்சத்தில் சக மாணவர்கள் போன்று, இவர்களும் நல்ல நிலைக்கு வர இயலும்.
அதாவது, சில எழுத்துக்களை பார்க்கும் போது ஏற்படும் குழப்பம், வடிவங்கள், நினைவு கூறுவதில் பிரச்னை, அடித்தல் திருத்தல் அதிகரித்தல், வலது இடது என்பதில் குழப்பம், நேரங்களில் குழப்பம், வேக குறைபாடு, தன்னை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துகொள்ள தெரியாமை, வாய்மொழி கணக்கு புரியாமை என கற்றல் குறைபாடுகளை பல வழிகளில் ஆராய்ந்து இத்தேர்வின் மூலம் தெரிந்து கொள்ள இயலும்.
இத்தேர்வு, முதல் கட்டமாக ஒன்றியத்தில் 10 பள்ளிகளில் நடக்கிறது. இரண்டு மற்றும் ஆறாம் வகுப்பை சேர்ந்த 341 மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வு முடிவுகளை உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படும்.
தொடர்ந்து முதல் கட்ட தேர்வின் முடிவுகள் குறித்து ஆய்வு செய்து அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்படும்." இவ்வாறு, அவர் கூறினார்.
குளத்துப்பாளையம் பஞ்சாயத்து துவக்கப்பள்ளி (பேரூர்), துடியலூர் பஞ்சாயத்து துவக்கப்பள்ளி (காரமடை), எஸ்.ஜி காலனி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி (பொள்ளாச்சி), பஞ்சாயத்து துவக்கப்பள்ளி (அன்னூர்), பத்மாநாபபுரம் அரசு பள்ளி (திருப்பூர்), எஸ்.எஸ்.குளம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (எஸ்.எஸ். குளம்), தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி (பச்சாபாளையம்), ஆர்.கோபாலபுரம் அரசு பள்ளி (பொள்ளாச்சி) அம்மன்பாளையம் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி (அவிநாசி), ஹவுசிங் யூனிட் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி(பெ.நாயக்கன்பாளையம்) உட்பட 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment