Wednesday, October 30, 2013

பிளஸ் 2 தேர்வு: ஆசிரியர்கள் அறிவிப்பால் திடீர் பரபரப்பு

பள்ளி பொதுத்தேர்வு ஒரு மாதம் முன்கூட்டி பிப்ரவரியில் துவங்கும் என, பல்வேறு பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் தகவல் பரப்பியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்வுத் துறை புதிய இயக்குனராக தேவராஜன் பொறுப்பு ஏற்றதில் இருந்து துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் "வரும் ஆண்டில் இரு பொதுத்தேர்வுகளும் ஒன்றாக நடக்கும்; லோக்சபா தேர்தல் காரணமாக, ஒரு மாதம் முன்கூட்டி, பிப்ரவரியிலேயே, தேர்வு துவங்கிவிடும்" என ஒரு மாதமாக பேச்சு அடிபடுகிறது. இதை, தேர்வுத் துறை இயக்குனர் ஏற்கனவே மறுத்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இரு நாட்களாக பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை தலைமை ஆசிரியர்களே வெளியிட்டு வருகின்றனர்.
தகவல் இல்லை
அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "லோக்சபா தேர்தல் காரணமாக முன்கூட்டியே தேர்வு துவங்கி விடும் என, எங்களுக்கும் தகவல் வருகிறது. பிளஸ் 2 தேர்வு பிப்., 19ம் தேதி முதல் நடக்கும் என சக ஆசிரியர் தெரிவிக்கின்றனர். ஆனால், எழுத்துப்பூர்வமாக தேர்வுத் துறையிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
முன்கூட்டி தேர்வு துவங்குவதாக இருந்தால் அதற்கு பள்ளிகள் தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படலாம்" என்றார்.
திருப்புதல் தேர்வு
தனியார் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் கூறியதாவது: "பிளஸ் 2 தேர்வு பிப்., 19ல் துவங்கிவிடும். எனவே வழக்கமாக மூன்று "ரிவிஷன்" (திருப்புதல் தேர்வு) தேர்வுகளுக்குப் பதில் இரு தேர்வு மட்டுமே நடக்கும். தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயாராக வேண்டும்." இவ்வாறு, ஆசிரியர் தெரிவித்து உள்ளனர்.
இந்த தகவலை வழக்கம்போல் தேர்வுத் துறை மறுத்துள்ளது. அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, "என் மகனும் இன்று காலை (நேற்று), இதே கேள்வியை கேட்டான். பல பள்ளிகளில் இந்த தகவல் பரவியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. உண்மையில் தற்போது வரை முன்கூட்டியே தேர்வை நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தேவையில்லாமல் யாரோ வதந்தியை கிளப்பி விடுகின்றனர்" என, தெரிவித்தார்.

No comments:

Post a Comment