Wednesday, October 30, 2013

திருப்பூர் அரசு பள்ளி மைதானத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

அரசு பள்ளி மைதானத்தில் மரம் நடுவதற்காக குழி தோண்டியபோது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

திருப்பூரில் உள்ள கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று மரக்கன்று நடுவதற்காக விளையாட்டு மைதானத்தில் குழிகள் தோண்டப்பட்டன. அப்போது, இரண்டு இடங்களில் பழமையான மண் பாண்டங்கள் மண்ணில் புதைந்து காணப்பட்டன.
மாணவர்கள் தோண்டி பார்த்தபோது நான்கரை அடி நீளம் கொண்ட குடுவை அமைப்பிலான மண் பாண்டம் புதைந்திருந்தது; வாய் பகுதி வட்ட வடிவமாக அமைக்கப்பட்டு அதில் சிறந்த வேலைப்பாடுகளும் காணப்பட்டன. பானைக்குள் மனிதனின் எலும்பு கூடுகள் மிகவும் மக்கிய நிலையில் கிடைத்தன. மண் பானை மிகவும் இறுகி காணப்பட்டது. இதன் மூலம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என தெரியவந்துள்ளது.
தோண்டப்பட்ட ஒரு பானையில் சிவப்பு நிற வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது; பழங்கால தமிழ் பிராமி எழுத்துக்கள் போன்ற குறியீடுகளும் காணப்படுகின்றன. திருப்பூர் பகுதியில் நொய்யல் நதிக்கரையில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கொடுமணல் நாகரிகம் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது. இங்கு, கல்லால் அமைக்கப்பட்ட பெரும்கற்படை சின்னங்கள், மணிகள், முத்துக்கள் தயாரிப்பு தொழிற்கூடங்கள் பழங்கால பொருட்கள் கிடைத்தன.
அதேபோல் ராக்கியாபாளையம் காஞ்சிபுரம் நல்லாற்றின் கரையில் அமைந்துள்ள பூம்பாறை, வெங்கமேடு, மண்ணரை உள்ளிட்ட பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் முது மக்கள் தாழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது, திருப்பூரில் முதன்முறையாக முது மக்கள் தாழி கிடைத்துள்ளது. திருப்பூர் நகரின் மைய பகுதியில் முது மக்கள் தாழி கிடைத்துள்ளதால் 2,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிகம் இப்பகுதியில் இருந்துள்ளது உறுதியாகியுள்ளது.
திருப்பூர் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த சிவதாசனிடம் கேட்டபோது, "திருப்பூரில் இதுவரை முது மக்கள் தாழி கிடைத்ததில்லை. முதன்முறையாக கிடைத்துள்ளது. அதன் மூலம், இங்கு பழங்கால மனித நாகரிகம் இருந்தது உறுதியாகியுள்ளது," என்றார்.

No comments:

Post a Comment