Friday, October 11, 2013

பள்ளி மாணவர்களின் மன குழப்பத்தை போக்க நடமாடும் ஆலோசனை மையம் அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்கான மன குழப்பத்தை போக்க நடமாடும் ஆலோசனை மையம் செயல்படவுள்ளது. முதற்கட்டமாக, இத்திட்டத்தில் பணிபுரியும் உளவியல் ஆலோசகர்களுக்கு சென்னையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக சென்னை, கோவை, வேலூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் நடமாடும் ஆலோசனை மையங்கள் ரூ.2 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆலோசனை மையங்களுக்காக நியமிக்கப்பட்ட உளவியல் ஆலோசகர்களுக்கு நிபுணர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து இந்தப் பயிற்சியை வழங்குகின்றன.
பள்ளி மாணவர்களுக்கு குடும்பச் சூழல், வளர் இளம் பருவத்தால் ஏற்படும் மாற்றங்களால் மனச்சோர்வு, மன அழுத்தம், மனக் குழப்பம் போன்ற பிரச்னைகளுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்காக நடமாடும் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உளவியல் ஆலோசகர்களுடன் பள்ளி ஆசிரியர்கள் 10 பேருக்கும், மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் 10 பேருக்கும் இந்த உளவியல் ஆலோசனைப் பயிற்சி வழங்கப்படுகிறது.
உளவியல் மருத்துவர் டாக்டர் விருதகிரிநாதன், சென்னைப் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர்கள் கருணாநிதி, சாமிநாதன், லாவண்யா ஆகியோர் இவர்களுக்குப் பயிற்சியை வழங்கவுள்ளனர்.

No comments:

Post a Comment