Friday, October 25, 2013

மாணவர்கள் எண்ணிக்கை குறைவான அரசு பள்ளிகளை ஒருங்கிணைக்க புதிய திட்டம்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகக் கொண்ட பள்ளிகளை ஒருங்கிணைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு (சி.இ.ஓ.,) உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும், 3000க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை மேம்படுத்தவும், அரசு பல்வேறு நலத்திட்டங்களுடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க இலவச சீருடை, பென்சில், நோட்டு புத்தகங்கள், காலணிகள் போன்றவை மட்டும் இன்றி ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆங்கில வழிக்கல்வி, கணினி வழி கல்வி போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன.
இருப்பினும், மாணவர்கள் சேர்க்கை நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது.சொற்ப எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பராமரிப்பு செலவு என அரசுக்கு செலவினங்கள் தேவையின்றி அதிகமாக உள்ளது.
எனவே 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பெறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து குறைவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகளை, வேறு பள்ளியுடன் ஒருங்கிணைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: "பள்ளிகளை ஒருங்கிணைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தெளிவான விதிமுறைகள் ஏதும் கொடுக்கப்படவில்லை. கட்டாய கல்வி உரிமைப்படி ஒரு கி.மீ., தொலைவுக்குள் ஒரு தொடக்கப் பள்ளி, 3 கி.மீ., தொலைவில் ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கி.மீ., தொலைவில் உயர்நிலைப்பள்ளி, 8 கி.மீ., தொலைவில், ஒரு மேல்நிலைப்பள்ளி செயல்படவேண்டும். பள்ளிகளை ஒருங்கிணைக்கும் பட்சத்தில், இந்த விதிமுறைகள் மீறப்படலாம்.
இது சார்ந்த ஆய்வுகளை மாவட்ட அளவில் மேற்கொண்டு வருகிறோம். மேற்கொண்டு மாணவர்கள் சேர வாய்ப்பில்லை எனும் பட்சத்தில் மட்டும், பள்ளிகள் ஒருங்கிணைக்கப்படும். மாணவர்களின் கல்விக்கு எவ்வித பாதிப்பும் இன்றி இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்." இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment