Monday, October 7, 2013

பள்ளி மாணவியருக்கு இலவச விடுதி வசதி

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ள மாணவியர் விடுதிகளில் சேர்க்கை நடந்து வருகிறது.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு மாதிரி பள்ளி, மாணவியர் விடுதி உள்ளிட்டவை துவங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 12 ஒன்றியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 12 மாதிரிப்பள்ளி துவக்கப்பட்டுள்ளன.
தற்போது, இந்த ஒன்றியங்களில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியர் தங்கும் வகையில், இலவச விடுதி கட்டுவதற்கு தலா 2.35 லட்சம் ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதி கட்டி முடிக்கும் வரை, தற்காலிக கட்டிடங்களில், விடுதியினை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் சேலம் மாவட்டத்தில் 12 மாணவியர் விடுதிக்கான சேர்க்கை துவங்கியுள்ளது. இந்த விடுதிக்கு, அந்தந்த ஒன்றியங்களில் உள்ள மாதிரிப்பள்ளி தலைமை ஆசிரியர், பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு விடுதிக்கும் தலா 100 மாணவியர் வீதம் மொத்தம் 1,200 மாணவியர் இவ்விடுதிகளில் சேர்க்கப்பட உள்ளனர். இதில் சேரும் மாணவியருக்கு மூன்று வேளை உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருட்களும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
கே.ஜி.பி.வி., பள்ளிகளில் படித்து வரும் மாணவியருக்கும், கண் பார்வையற்ற, காது கேளாத மாணவியர், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவியர், பெற்றோர் இல்லாத, முதியோர் பராமரிப்பில் உள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இதில் சேர விரும்பும் மாணவியர், அந்தந்த ஒன்றியத்தை சேர்ந்த மாதிரிப்பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் அணுகலாம்.
கொங்கணாபுரம் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் வெள்ளாளபுரம் மாதிரிப்பள்ளி, இடைப்பாடி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் செட்டிமாங்குறிச்சி மாதிரிப்பள்ளி, காடையாம்பட்டி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் நடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஏற்காடு ஒன்றியத்தை சேர்ந்தவர்கள், ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, மகுடஞ்சாவடி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் மகுடஞ்சாவடி மேல்நிலைப்பள்ளி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தை சேர்ந்த மாணவியர், ஏத்தாப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொளத்தூர் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் கொளத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சங்ககிரி ஒன்றியத்தில், சங்ககிரி அரசு மேல்நிலைப்பள்ளி, தாராமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் தாரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள், இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து, விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
விபரங்களுக்கு 73730 02874 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment