Saturday, February 15, 2014

புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பீடு முறை அறிமுகம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை வரும் 2014-15ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2011-12 கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில், மெட்ரிக்குலேஷன் மற்றும் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டமான எஸ்.எஸ்.எல்.சி., முறை இருந்து வந்தது. அனைவருக்கும் ஒரே முறையிலான கல்வியை கொடுக்கும் நோக்கத்தில் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி மாணவர்களுக்குத் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்ற அடிப்படையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. மொத்தமுள்ள நூறு மதிப்பெண்ணில் 40 மதிப்பெண்கள் வளர் அறி மதிப்பீடு மற்றும் தொகுத்தறி மதிப்பீடு முறையிலும், மீதமுள்ள 60 மதிப்பெண்கள் பாடப் புத்தகங்களிலிருந்தும் மாணவர்கள் பெற வேண்டும்.
வளர் அறி மதிப்பீட்டின் படி மாணவர்கள் தனித்திறமையான ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தனித் திறமைகளும், தொகுத்தறி மதிப்பீட்டின்படி மாதந்தோறும் பள்ளியில் நடத்தப்படும் சிலிப் டெஸ்ட், வீக்லி டெஸ்ட் உள்ளிட்ட தேர்வுகள் ஆகியன கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
புதிய தேர்வு முறை 2012-13ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையில் அமல்படுத்தப்பட்டது. 2013-14ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையில் வரும் 2014-15ம் கல்வியாண்டில் முதன் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் தொடர் மற்றும் முழு மையான மதிப்பீடு முறை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்து வருகின்றது. புதிய தேர்வு முறைப்படி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாடப்புத்தகத்திலிருந்து நூறு மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. புதிய முறைப்படி 40 மதிப்பெண்கள் வளர் அறி மற்றும் தொகுத்தறி மதிப்பீட்டு முறையிலும், மீதமுள்ள 60 மதிப்பெண்கள் பாடப்புத்தகத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளித்தால் போதுமானது.
வழக்கமாக பெரும்பாலான மாணவர்கள் நூறு மார்க் எடுப்பதற்காக புத்தகங்களை மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆனால் புதிய முறையில் புத்தகத்திலிருந்து 60 மதிப்பெண் மட்டுமே எடுக்க வேண்டும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் மாணவர்களின் தனித்திறமைக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்.
தமிழகத்தில் வரும் 2014-15ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையை அமல்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியில் புதிய முறை அமல்படுத்தப்படும்.

No comments:

Post a Comment