Sunday, February 23, 2014

பிளஸ் 2 தேர்வுக்கு பார்கோடு எண் அமைந்த மேல் தாள்கள்

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்காக, பார்கோடு எண் அமைந்த மேல் தாள்கள், தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; மேல்தாளுடன், விடைத்தாள்களை, 16ம் எண் ஊசியில், வெள்ளை நூலால், ஒரு அங்குலத்துக்கு, ஆறு தையல் விழும் வகையில் தைக்குமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. இதில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், தேர்வெழுத உள்ளனர். நடப்பு கல்வியாண்டில் தேர்வுத்துறை, பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தேர்வுக்கு தேவையான விடைத்தாள், மாணவர்களின் விபரம் கொண்ட மேல்தாள், கோட்டுரு தாள் (கிராப் ஷீட்) மற்றும் வரைபடம் உள்ளிட்ட, தேர்வுக்கான பொருட்கள் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ப்ளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாளில், ஒவ்வொரு பாடத்துக்கும் தகுந்தாற் போல், கோட்டுரு மற்றும் வரைபடம் உள்ளிட்ட தாள்கள் தனித்தனியே வழங்கப்பட்டுள்ளன. அதே போல், மாணவர்களின் பதிவெண் மற்றும் விபரங்களை கொண்ட, "டாப் ஷீட்" வழங்கப்பட்டுள்ளது.
விடை தாள்களுக்குள் வித்தியாசம் வந்து விடாதபடி, தையற்காரர்களை அமர்த்தி, 16ம் எண் ஊசி மூலம், ஒரு அங்குலத்துக்கு, ஆறு தையல் விழும்படி, வெள்ளை நூலில், டாப் ஷீட்டுடன், விடைத்தாள்களை தைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேல் தாள் கிழிந்து விட்டால் கல்வித்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு மீண்டும் மேல் தாளை பெற்றுக் கொள்ளலாம்.
மொத்தம் 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில், மேல் தாள் மதிப்பெண் குறிப்பிடுவதற்கான பட்டியல் போக மீதமுள்ள, 36 பக்கங்களில், மாணவர்கள் தேர்வெழுதலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment