Wednesday, February 26, 2014

விருதுநகர் மாணவரின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த பள்ளி மாணவன் கண்டுபிடித்த மின் சாதனத்திற்கு, சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பிற்கான, தேசிய விருதும் (இக்னைட்), காப்புரிமையும் மத்திய அரசு வழங்கி உள்ளது.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப கழகமும், அதன் இணை நிறுவனமான தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு நிறுவனமும் ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை தேர்வு செய்து ஜனாதிபதி மூலம் விருது வழங்கி, கவுரவித்து வருகிறது. கடந்த ஆண்டு விருதுக்காக, இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலிருந்தும், 20 ஆயிரத்து 836 புதிய கண்டுபிடிப்புகள், மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டன.
அதில், தமிழகத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி மாணவன் டெனித் ஆதித்யா, "அட்ஜஸ்டபிள் எலக்ட்ரிசிட்டி எக்ஸ்டென்சன் போர்டு" என்ற மின்சாதனத்தை கண்டுபிடித்து, ஆய்வுக்கு சமர்ப்பித்திருந்தார். இந்த ஒரே சாதனத்தில், டிவி பிரிட்ஜ், மிக்சி, செல்போன் சார்ஜர் உட்பட பல்வேறு வகையான உயர், மற்றும் தாழ்ந்த அழுத்தமுள்ள மின்சார சாதனங்களை, அதிகளவில் இணைத்து மின் இணைப்பு பெறலாம்.
அந்த ஆய்விற்கு, 27 கண்டுபிடிப்புகள் மட்டும் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டது. அவற்றில் சிறந்ததாக, டெனித் ஆதித்யாவின் மின்சாதனம் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த தேசிய கண்டுபிடிப்பாக அறிவிக்கப்பட்டது. மேலும், 2013 செப்டம்பரில், சிறந்த கண்டுபிடிப்பாளர்களாக தேர்வு பெற்றவர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த வாரம் குஜராத் தலைநகர் அகமதாபாத் ஐ.ஐ.எம். மையத்தில் தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு நிறுவன தலைமை அதிகாரி விபின்குமார் தலைமையில் நடந்தது.
துணை தலைவர் அனில் கே குப்தா முன்னிலை வகித்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தேர்வு பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் டெனித் ஆதித்யாவின் கண்டுபிடிப்பிற்கு, மத்திய அரசின் காப்புரிமையையும் வழங்கினார்.

No comments:

Post a Comment