Sunday, February 23, 2014

பிளஸ் 2 தேர்வுப்பணியில் ஒரு லட்சம் பேரை ஈடுபடுத்த திட்டம்

பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்னும், 9 நாட்கள் மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை, முழுவீச்சில் செய்து முடித்துள்ளது. தேர்வுப் பணியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர், ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. 8.45 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுத உள்ளனர். தேர்வுக்கு, இன்னும் 9 நாட்கள் தான் இருக்கிறது. இதனால், தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன், முழுவீச்சில் செய்து முடித்துள்ளார்.

கடந்த ஆண்டு 2,020 மையங்களில், தேர்வு நடந்தன. இந்த ஆண்டு கூடுதலாக, 80 மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. எனவே 2,100 மையங்களில் 40 ஆயிரம் அறைகளில் தேர்வு நடக்க உள்ளது.
வினாத்தாள் கட்டுகள், பாதுகாப்பாக வைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல் கேள்வித்தாள், வெளியானது. இதுபோன்று எதுவும் நடக்காத வகையில், பாதுகாப்பான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரில் துவங்கி உதவியாளர் வரை, பல்வேறு நிலைகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர் என ஒரு லட்சம் பேர் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் கூறுகையில், "மொழிப்பாட தேர்வுகளின்போது, ஒரு லட்சம் பேர், பணியில் ஈடுபடுவர். இதர பாடங்களின் போது 50 ஆயிரம் பேர் வரை, தேர்வுப் பணியில் ஈடுபடுவர். பறக்கும் படையில் 4,000 உறுப்பினர்கள் இடம்பெறுவர். முக்கிய தேர்வுகளை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கல்வித்துறை இணை இயக்குனர்கள் நியமிக்கப்படுவர்" என்றார்.
இதற்கிடையே தேர்வை சுமுகமாக நடத்துவது குறித்தும், எவ்வித முறைகேடு புகார்களுக்கு இடமின்றி நடத்துவது குறித்தும் விவாதிக்க, 25ம் தேதி சென்னையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது.
அமைச்சர், வீரமணி, செயலர், சபிதா, பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் உட்பட பலர், கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்திற்குப் பின் மாவட்ட வாரியாக தேர்வு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ள அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்படும் என தெரிகிறது.
தனியார் பள்ளிகள் அதிகம் நிறைந்துள்ள, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களை, அதிகாரிகள், தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment