Wednesday, February 12, 2014

மின்தடை: பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு

செய்முறைத் தேர்வில் மின்தடை இருக்க கூடாது என, அரசு உத்தரவிட்டிருந்தும், மின்துறை அமைச்சர் மாவட்டத்தில், திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால், பிளஸ் 2 செய்முறை நடத்த முடியாமல், பள்ளி ஆசிரியர்கள் தவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. இந்த தேர்வில், 16,189 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். இந்த தேர்வு முதல் கட்டமாக பிப்.,15 வரை திண்டுக்கல், நிலக்கோட்டை, பழநி ஆகிய 3 தாலுகாக்களில் 77 மையங்களில் நடந்து வருகிறது.
பழநி துணை நிலையத்திற்குட்பட்ட புறநகர் பகுதியில், நேற்று மாலை 3:00 முதல் 6:00 மணி வரை திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் நெய்காரப்பட்டி, சண்முகநதி பகுதியில் உள்ள சில பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல் போன்ற செய்முறைத் தேர்வுகள் பாதியில் நிறுத்தப்பட்டன. பின் மின்சாரம் வந்ததும் இரவு வரை செய்முறைத்தேர்வு நடந்தது. இதனால், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அவதிப்பட்டனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், "செய்முறைத் தேர்வு நடக்கும் நாட்களில் மின்தடை இருக்கக் கூடாது" என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல், மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது" என்றனர்.

No comments:

Post a Comment