Saturday, February 15, 2014

விடைத்தாள்களை திருத்தாமல் மதிப்பெண் வழங்கிய அவலம்

விடைத்தாள்களை திருத்தாமல் பருவத்தேர்வில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கோவை அரசு கலை கல்லூரி எம்.எஸ்.சி., தாவரவியல் மாணவர்கள் நேற்று வகுப்புக்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு கலை கல்லூரியில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த இரண்டாம் பருவத்தேர்வுகளுக்கான மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் முதல் மதிப்பீட்டு தேர்வுக்கான மதிப்பெண்கள் "பூஜ்யம்" என்று அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாவரவியல் துறை முதுகலை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று கல்லூரி வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு காவல்துறையின் சமரசத்தையடுத்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், "முதல் மதிப்பீட்டு தேர்வில் அனைத்து மாணவர்களுக்கும் "பூஜ்யம்" மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்தாமல் மதிப்பெண்கள் வழங்கியது முறையற்றது. கல்லூரி நிர்வாகமும் இதனை கண்டுகொள்ளவில்லை. பருவத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றாலும் நல்ல மதிப்பெண்களை இழந்துள்ளனர். குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மூன்று பேர் தோல்வி அடைந்துள்ளனர். பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தின் அலட்சியத்தால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது" என்றனர்.
கல்லூரி முதல்வர் ஜோதிமணி கூறுகையில், "மாணவர்களின் விடைத்தாள் திருத்தாமல் இருந்த பேராசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விடைத்தாள்களை உடனடியாக திருத்தி மதிப்பெண்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்ட பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தின் மீது கல்லூரி கல்வி இயக்குனர், பல்கலை துணைவேந்தர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment