Wednesday, February 12, 2014

இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கான அறிவியல் திறன் வளர்ப்பு பயிற்சி

மேல்நிலை மாணவர்களுக்கான இளம் மாணவ விஞ்ஞானிகள் அறிவியல் பயிற்சி போடி சி.பி.ஏ., கல்லூரியில் துவக்கப்பட உள்ளது.
கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜராஜன் கூறியதாவது: இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கிராமப்புற மாணவர்கள் அறிவியல் திறனை வளர்த்துக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களில் அறிவியல் பாடம் படிப்பவர்களுக்கு இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கான பயிற்சி போடி சி.பி.ஏ., கல்லூரியில் துவங்க உள்ளது.

இப்பயிற்சி பிப்.26 ல் துவங்கி மார்ச் 2 ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில் ரூ. 9.75 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காக தேனி, திண்டுக்கல் மாவட்டத்தை ஒவ்வொரு பள்ளியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 450 மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர். இதில் 150 மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவர்களுக்கு தினமும் காலை 6 முதல் 7 மணி வரை யோகாசனம், காலை 9 முதல் 1 மணி வரை பயிற்சி வகுப்புகள், மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை ஆய்வுக்கூட பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல் பற்றிய பாடங்கள் நடத்தப்படும். இரவு 6 முதல் 8 மணி வரை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பொறியியல் வல்லுநர்கள், மனோ தத்துவ நிபுணர்கள், தொழில் அதிபர்கள், அறிவியல் அறிஞர்களின் விரிவுரைகள் நடைபெற உள்ளது.
இந்திய, உலக அளவிலும் விருதுகள் பெற்ற விஞ்ஞானிகள் பேச உள்ளனர். தொழிற்சாலை, ஆய்வுக் கூடங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று விளக்க பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சியின் போது மாணவர்கள் தாங்களாகவே ஒரு பொருளை கண்டுபிடித்தால் ஊக்கம் அளிக்கப்படுவதோடு, கண்காட்சியும் நடத்தப்படும்.
பயிற்சியின் போது மாணவர்கள் தங்குவதற்கான இடம், உணவு வசதி, அறிவியல் தொடர்பான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். முகாமில் சேர விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் தொலை பேசி எண் 04546 - 280209 / 280793 - ல் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பங்களை கல்லூரி இணைய தளம் www.cpacollege.org -ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment