Sunday, February 23, 2014

இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: 43, 051 மையங்களில் விநியோகம்

தமிழகம் முழுவதும் ஐந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் என தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 சொட்டு மருந்து மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படவுள்ளது.
புதியதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாள்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்பட்டதன் அடையாளமாக குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படும். சொட்டு மருந்து கொடுக்கப்படாமல் விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிவதற்காக விரலில் மை வைக்கப்படுகிறது.
காலை 7 மணி முதல்...: சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாள்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாள்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
பயணம் மேற்கொள்பவர்களுக்கு...: முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மொத்தம் 1652 நகரும் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கென்று 1000 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், ரோட்டரி இன்டர்நேஷனல் போன்ற தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சென்னையில் ...: சென்னையைப் பொருத்தவரை 1,162 மையங்களும், 27 நடமாடும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, ஷாப்பிங் மால்கள், கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் போன்ற இடங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் மட்டும் சுமார் 5,400 பேர் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment