Friday, October 4, 2013

வகுப்பை புறக்கணித்த பள்ளி மாணவர்கள்: அதிகாரிகளை விரட்டிய தலைமை ஆசிரியை

போச்சம்பள்ளி: அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியையை கண்டித்து, மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்தனர். பேச்சு வார்த்தை நடத்த வந்த, தாசில்தார் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலரை, தலைமை ஆசிரியை ஆவேசமாக பேசி, பள்ளியை விட்டு வெளியேறும்படி கூறியதால், பதற்றம் உருவானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 942 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி தலைமையாசிரியை, கனியமுது, 58. காவேரி பட்டணத்தைச் சேர்ந்த இவருக்கும், அதே பள்ளி, முதுகலை கணித ஆசிரியையான கவிதாவுக்கும் இடையே, கருத்து வேறுபாடு உள்ளது. கவிதாவை பிரம்பால் அடிக்கும்படி, மாணவர்களிடம், தலைமை ஆசிரியை கனியமுது கூறியதால், கடந்த மாதம், 14ம் தேதி, ஆசிரியை கவிதா, பள்ளி மாடியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். சக ஆசிரியர்கள் அவரை சமாதானப்படுத்தி, கீழே அழைத்து வந்தனர்.
இது மட்டுமின்றி, மற்ற சில ஆசிரியர்களுக்கும், கனியமுது, &'டார்ச்சர்&' கொடுத்து, அதுபற்றி, முதன்மைக் கல்வி அலுவலரிடம், புகார் கொடுக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், தலைமை ஆசிரியை கனியமுதுவை கண்டித்து, நேற்று, 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், வகுப்புகளை புறக்கணித்து வாயிலில் கூடினர். அவர்களுக்கு ஆதரவாக, பெற்றோரும் கூடியதால், பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் அன்பு மற்றும் தாசில்தார் நடராஜன் மற்றும் போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்றனர். அப்போது, அவர்களை வழிமறித்த தலைமை ஆசிரியை கனியமுது, அனைவரையும் பள்ளியை விட்டு, வெளியே செல்லும்படி கூறியுள்ளார். அத்துடன், வகுப்புகளை புறக்கணித்த, 200 மாணவர்களை தவிர, பள்ளிக்கு வந்த மற்ற மாணவர்களை, பள்ளி வளாகத்தில், ஒரு மணி நேரம் நிற்க வைத்து, கனியமுது, &'ப்ரேயர்&' நடத்தினார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பெற்றோரையும், திட்டி அனுப்பினார். ஆத்திரமடைந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளின், டி.சி.,யை தரும்படி கேட்டனர். அவர்களை, கல்வித் துறை அதிகாரிகள் சமாதானப் படுத்தி அனுப்பினர். &'தலைமை ஆசிரியையின் நடவடிக்கை குறித்து, கல்வித் துறை இயக்குனருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவரிடம் இருந்து உத்தரவு வந்தவுடன், தலைமை ஆசிரியை கனியமுது மீது, என்ன நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்படும்&' என, முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி கூறினார். இச்சம்பவத்தால், அகரத்தில் நேற்று பதற்றம் ஏற்பட்டது.

No comments:

Post a Comment