Thursday, October 3, 2013

பெரம்பலூரில் ஆசிரியர் காலிப்பணியிடம்: மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 35 அரசு மேல்நிலைப் பள்ளியும், ஒரு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியும், 38 அரசு உயர்நிலை பள்ளியும், 4 ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியும் உள்ளன.

காலாண்டு தேர்வு முடிந்துவிட்ட நிலையிலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளில் போதிமான ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதனால் இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறையவும் வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட பாடப்பிரிவை சேர்ந்த ஆசிரியர்கள் அல்லாதவர்களை காலிபணியிடங்கள் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்த தலைமை ஆசிரியர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
குறிப்பிட்ட பாடப்பிரிக்கு உள்ள ஒரு சில ஆசிரியர்களே அதிகப்படியான மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு கூடுதலான பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பாடம் வாரியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்-11, ஆங்கிலம்-6, கணிதம்-13, இயற்பியல்-3, வேதியியல்-6, தாவரவியல்-3, விலங்கியல்-8, வரலாறு-3, பொருளாதாரவியல்-11, வணிகவியல்-13 என 77 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பாடம் வாரியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்-1, ஆங்கிலம்-34, கணிதம்-1, அறிவியல்-2, சமூகஅறிவியல்-101 என 139 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
இந்த காலிப்பணியிடங்கள் உள்ள ஒரு சில இடங்களில் மட்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்காலிகமாக ஆசிரியர்களை பணியமர்த்தியுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுகளுக்கு குறைந்தபட்ச தொகுப்பூதியமே வழங்கப்படுகிறது.
ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படாதற்கு அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வும் காரணமாக உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களையே நிரந்தப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கல்விக்கு முக்கியத்துவம் அளித்து மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க முனைப்புடன் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, மாணவர்களின் தரமான கல்விக்கு உதவிடுவதுடன், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கவும் வகை செய்ய வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு.
கல்வித்துறையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: "பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்கள் குறித்து எங்கள் உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். அவர்களின் அறிவுரையின்பேரில் தற்போது பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் காலிப்பணியிடங்களில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள தலை மை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விரைவில் இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்திய மாணவர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ் கூறுகையில், "பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. காலாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையிலும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. அரசு தகுதி தேர்வின் மூலமோ, சீனியாரிட்டி மூலமோ உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்," என்றார்.

No comments:

Post a Comment