Monday, March 3, 2014

பிளஸ் 2 தேர்வு: பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகள் தீவிரம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில், போதுமான அடிப்படை வசதிகள் செய்தல் மற்றும் கண்காணிப்புப் பணிகளை கல்வித்துறை அதிகாரி கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 61 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், இந்தாண்டு மார்ச் 3ம் தேதி (இன்று) துவங்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வினை, மாணவர்கள் 2,928 பேரும் மாணவியர் 3,922 என மொத்தம் 6,850 பேர் தேர்வு எழுதுகின்றனர்; மொத்தம் 21 மையங்களில், தேர்வு நடைபெறுகிறது.
இது தவிர, 160 தனித்தேர்வாளர்கள், ருக்மணியம்மாள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பி.கே.டி., மெட்ரிக்குலேஷன் பள்ளியில், தேர்வு எழுதுகின்றனர். இதனையடுத்து, மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வினியோகம், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டனர்.
கடந்தாண்டை போல் அல்லாமல், இந்தாண்டு தேர்வு நடைமுறையில் பல்வேறு புதிய யுக்திகளை கல்வித்துறை புகுத்தியுள்ளது. தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கொண்டு செல்வதற்காக தனியாக வழித்தட அலுவலர்கள் இந்தாண்டு நியமித்தது; விடைத்தாளில் மாற்றம் போன்றவற்றில், புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில், போதுமான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இன்று துவங்கி, மார்ச் 25ம் தேதி வரை நடைபெறும் பொதுத்தேர்வினை அமைதியான முறையில், நடத்த முன்னேற்பாடுகளை ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதில், அறை கண்காணிப்பாளர் 400 பேரும், நிலையான பறக்கும் படை 40, பறக்கும் படை-50, முதன்மை கண்காணிப்பாளர்-21, துறை அலுவலர்கள் -21 என அலுவலர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட உள்ளனர்.
இது தவிர, வழித்தட அலுவலர்கள் 6 பேரும், அவர்களுக்கு உதவி அலுவலர் 6 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். போதுமான போலீசார் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில், போதுமான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு மொபைல்போன் எடுத்து வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போதுமான அறிவுரைகள் தேர்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.
கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், "பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சத்துடன் செல்லக்கூடாது. தேர்வு மைய அறைக்குள் செல்லும் வரை படிக்க வேண்டாம். மனதை ரிலாக்சாக வைத்திருக்கவும். படித்தது வரும் என்ற நம்பிக்கையுடன், மகிழ்ச்சியுடன் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும்.
வினாத்தாள்களை நன்றாக படித்து, விடையளிக்க வேண்டும். பொறுமை மற்றும் நிதானத்துடன் தெளி வாக விடை எழுத வேண்டும். உடல் ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும்" என்றனர்.
தேர்வு மையங்களாக உள்ள பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர், பணியாட்கள், அலுவலர்கள் என யாருக்கு அனுமதியில்லை என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு நிலை பறக்கும் படை அதிகாரி வீதம் 28 நிலை பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தேர்வுகளை கண்காணிக்க உள்ளனர்.
உடுமலையில் தேர்வு நடக்கும் மையங்களிலிருந்து விடைத்தாள் மற்றும் வினாத்தாள் எடுத்து செல்ல 3 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களாக உள்ள அனைத்து பள்ளிகளிலும் குடிநீர், தேர்வறை வசதி போன்றவை தயார் நிலையில் உள்ளது.
உடுமலை பகுதி பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், "மாணவர்கள் பதட்டம் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளவும், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் எடுத்துச்செல்வதில் எவ்வித தவறுகளும் நிகழ்ந்திடாத வண்ணம் பள்ளி கல்வித் துறை பல்வேறு புதிய மாற்றங்களை செய்துள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

No comments:

Post a Comment