Friday, March 21, 2014

மாணவர்கள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மூலம், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் சண்முகம் தெரிவித்தார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சதீஸ், கலெக்டரின் நேர்முக உதவியார் கஸ்தூரி மற்றும் பலர் பங்கேற்றனர்.கலெக்டர் சண்முகம் பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவியர் மூலம், பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மனித சங்கிலி பேரணி, துண்டு பிரசுரங்கள் வினியோகம், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, சிறிய வாக்கிய போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும்.
வணிக வரித்துறை மூலம் வியாபாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பொதுமக்கள் கூடும் பஸ் ஸ்டாண்ட், சினிமா தியேட்டர், வர்த்தக நிறுவனங்கள் ஆகிய இடங்களில், இடையூறின்றி வாக்காளர் விழிப்புணர்வு குறித்த விளம்பர தட்டிகள் வைக்க வேண்டும்.
கலைப் பண்பாட்டுத் துறை மூலம், நாட்டுப்புற கலைஞர்களால், தெருக்கூத்து, தப்பாட்டம் நிகழ்ச்சிகளால், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment