Monday, March 10, 2014

இலவச சீருடைக்கு நிதி ஒதுக்காததால் நூல் தயாரிப்பு நிறுத்தம்

தமிழகத்தில், கூட்டுறவு நூற்பாலைகளுக்கு பஞ்சு கொள்முதல் செய்ய, நிதிஒதுக்கீடு செய்வதில் இழுத்தடிப்பு செய்வதால், நூல் உற்பத்திக்கு பஞ்சு இல்லாமல், உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இலவச சீருடை திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு நூற்பாலை கள், தூத்துக்குடி எட்டையபுரம், கன்னியாகுமரி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து இடங்களில் இயங்கி வருகின்றன. அரசின் இலவச திட்டங்களான, வேட்டி, சேலை, இலவச சீருடை ஆகியவற்றிற்கு நூல் உற்பத்தி செய்து தருகின்றன. இந்த நூல், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும். அவர்கள் இலவச வேட்டி, சேலை, சீருடை துணிகளை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்குவர்.
அரசு இலவச சீருடை திட்டத்திற்காக, நடப்பு ஆண்டிற்கு, 77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ஐந்து கூட்டுறவு நூற்பாலைகளுக்கும் பஞ்சு கொள்முதல் செய்ய மாதம் ஒரு முறை முன் பணம் வழங்க வேண்டும். கடைசியாக 2013 நவ., மாதத்தில் பஞ்சு கொள்முதலுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் கொள்முதல் செய்யப்பட்ட பஞ்சுகளில் இருந்து நூல் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பின்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
கைத்தறி துறை சார்பில், பிப்., மாதம் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை கடிதம் நிதித்துறையின் செயலர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து ஒப்புதல் கிடைக்காததால், நிதி கிடைக்கவில்லை. ஐந்து கூட்டுறவு மில்களிலும் பஞ்சு இல்லாததால், ஐந்து நாட்களாக நூல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 1,500 தொழிலாளர்களுக்கு கூட்டுறவு நூற்பாலைகளில், பணியில்லாமல் சம்பளம் வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கூட்டுறவு நூற்பாலைகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கூட்டுறவு நூற்பாலைகளில் நூல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், சீருடை தயாரிக்கும் பணிகளில் உள்ள, கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்களுக்கு, நூல் சப்ளை செய்வது பாதிக்கப்படும். இதனால், ஜூன் மாதத்தில், பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதில் பாதிப்பு ஏற்படும். கூட்டுறவு நூற்பாலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆண்டுதோறும் அரசு இலவச திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து விடுகிறது. இந்த நிதி?ய விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதால், பஞ்சு கொள்முதல் பாதிக்கப்படுகிறது. பஞ்சு இல்லாவிட்டால், நூல் உற்பத்தி பாதிக்கும். கூட்டுறவு நூற்பாலைகள் நஷ்டத்தை சந்திக்கும். நூல் இல்லாத நிலையில் இலவச சீருடை உற்பத்தி பாதிக்கும். உரிய நேரத்தில் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்க முடியாமல், சிக்கல் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment