Monday, March 3, 2014

"தேர்வு மையங்கள் அருகே ஒலிப்பெருக்கி வேண்டாம்"

பொதுத் தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு அருகே, ஒலிப் பெருக்கிகளை அமைக்க வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள், பத்தாம் வகுப்பு தேர்வுகள்  தொடங்குகின்றன. மாணவர்கள் அடுத்தகட்ட உயர் கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக இத்தேர்வுகள் உள்ளன. மாணவர்கள் தங்கள் பள்ளி வகுப்பறைகளில், பள்ளி அரங்குகளில் மாதாந்திர, மாதிரி தேர்வுகளை எழுதியதைப் போலவே அச்சமோ, பதற்றமோ இன்றி எழுத வேண்டும்.
மாணவச் செல்வங்களின் அறிவுத்திறனையும்; ஆற்றலையும் முழுமையாக வெளிக் கொணரும் கருவி அல்ல தேர்வுகள். ஆனாலும், அவர்களின் பயிலும் திறனை ஓரளவு வெளிப்படுத்துகின்ற வாய்ப்பாகவே தேர்வைக் கருத வேண்டும். எனவே, புரிந்து படித்து இயல்பான நிலையில் பொதுத்தேர்வை எதிர்கொண்டு சிறப்பாக எழுதி வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்களுக்கு உதவிடும் வகையில், பொதுத்தேர்வு நடைபெறும் காலங்களிலும், தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிப் பகுதிகளிலும் அரசியல் கட்சிகளோ, இதர அமைப்புகளோ, திருவிழா கொண்டாடுகிற அமைப்பினரோ சத்தமாக ஒலிப் பெருக்கியை இயக்கிடும் முறையை முற்றிலும் தவிர்த்திட முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment