Friday, October 4, 2013

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் 84 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் 84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கடந்த கல்வி ஆண்டில் (2012-13) எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்த 3,900-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணையதளம் www.tnmgrmu.ac.in-தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (அக்.3) இரவு வெளியிடப்பட்டது.
முதலாம் ஆண்டு தேர்வில் 84 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்த மாணவர்களில் சராசரியாக 90 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மருத்துவக் கல்லூரி- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தலா 89 சததவீதம், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 92 சதவீதம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் 90 சதவீதம் என மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சுயநிதி கல்லூரிகளில் படித்த மாணவர்களில் சராசரியாக 80 முதல் 85 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இரண்டு வாரத்தில் மறு தேர்வு: எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால்கூட, இரண்டாம் ஆண்டுக்கு குறிப்பிட்ட மாணவர் செல்ல முடியாத அளவுக்கு பிரேக் சிஸ்டம் நடைமுறையில் உள்ளது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும் வகையில் தேர்ச்சி அடையாத பாடங்களுக்கான மறு தேர்வை உடனடியாக நடத்தி முடிவை அறிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு உதவும் வகையில் மறு தேர்வை இரண்டு வாரங்களுக்குள் நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
மறு தேர்வு குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை (அக்.4) வெளியாகும் என்று பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment