Wednesday, October 2, 2013

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய பின் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம்

மதுரையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய பின், சம்பந்தப்பட்ட மாணவரின் விண்ணப்பத்தை நிராகரித்து தேர்வுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இது, தனித்தேர்வாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பொதுத்தேர்வுகளை, தனித் தேர்வர்கள் ஏப்ரல், ஜூன் மற்றும் அக்டோபரில் விண்ணப்பித்து, தேர்வு எழுதுகின்றனர். இதற்காக, தனிக்கட்டணம் செலுத்த வேண்டும். அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கட்டாயம். இம்முறையில், மதுரை பேங்க் காலனி ராஜாராமன் மகன் சிரஞ்சீவிகுமார், பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கு விண்ணப்பித்தார். அதற்காக, ஆக.,8 மற்றும் 24, செப்.,9 மற்றும் 11 ஆகிய தேதிகளில், மதுரைக்கல்லூரி பள்ளியில் நடந்த செய்முறை தேர்வுகளில் பங்கேற்றார்.
இதையடுத்து, சிரஞ்சீவிகுமார் செப்.,30ல் தேர்வு எழுதினார். ஆனால், "விண்ணப்பதாரர் செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாமல் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளதால், இதை ஏற்க இயலாது. எனவே, விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது,' என அவருக்கு தேர்வுத்துறை நேற்று கடிதம் அனுப்பியது.
ராஜாராம் கூறியதாவது: எனது மகன் பத்தாம் வகுப்பு தேர்வை "பிரைவேட்" ஆக எழுதி, அறிவியலில் மட்டும் தோல்வியடைந்தார். அதன் பின், ஏப்., மற்றும் ஜூனில் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. பின், செய்முறை தேர்வில் பங்கேற்று, அக்.,ல் எழுத "ஆன்லைனில்" விண்ணப்பித்து, "ஹால் டிக்கெட்" பெற்றோம். செப்.,30ல் தேர்வு எழுதினார்.
ஆனால், தேர்வு எழுதிய பின், அக்.,1ல், விண்ணப்பமே நிராகரிக்கப்படுவதாக தேர்வுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது குழப்பமாக உள்ளது. இதற்கு கல்வி அதிகாரிகளும் உரிய பதில் அளிக்கவில்லை, என்றார்.
தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனித்தேர்வு முறையில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. அக்.,ல் தேர்வு எழுத வேண்டுமென்றால் அந்த ஆண்டில் மார்ச்சிற்குள் செய்முறைத் தேர்வில் அந்த மாணவர் பங்கேற்க வேண்டும். ஆனால், ஏப்.,ல் செய்முறை தேர்வில் பங்கேற்று, "ஆன்லைன்" மூலம் விண்ணப்பித்து, "ஹால்டிக்கெட்" பெற்று பலர், அக்டோபரில் தேர்வு எழுதி விடுகின்றனர். அவ்வாறு எழுதும்போது, அந்த மாணவரின் விண்ணப்பம் நிராகரிக்க தேர்வு துறை வலியுறுத்துகிறது. இக்குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment