Sunday, January 19, 2014

ஜனவரி இறுதியில் பிளஸ் 2 தேர்வு பதிவு எண் வழங்கப்படுகிறது

மார்ச் 3ம் தேதி துவங்கும் பிளஸ் 2 பொது தேர்வை 8.26 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களுக்கான பதிவு எண்கள், இம்மாத இறுதியில் வழங்கப்படுகின்றன.

வரும் மார்ச் 3ல் இருந்து 25 வரை பிளஸ் 2 தேர்வுகள் நடக்கின்றன. இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் "தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில், பள்ளி அளவில் திருத்தங்கள் இருந்தால், 20ம் தேதிக்குள், மாற்றம் செய்து, மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 21 முதல், 23 வரை, அந்த திருத்தங்களை, இணையதளம் வழியாக, மாவட்ட கல்வி அலுவலர்கள், சரி செய்ய வேண்டும்" என 32 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர்கள், திருத்தங்களை பதிவு செய்ததும் அந்த விவரம், நேரடியாக சென்னையில் உள்ள, "டேட்டா சென்டரில்" பெறப்படும். பெறப்பட்ட புள்ளி விவரத்தின்படி, 8 லட்சத்து 26 ஆயிரத்து 67 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.
பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என்பதால் இம்மாத கடைசி வாரத்தில் 8.26 லட்சம் மாணவர்களுக்கும் பதிவு எண்களை வழங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. ஜனவரி 27ம் தேதியில் இருந்து 31ம் தேதிக்குள், மாணவர்களுக்கு ஏழு இலக்கங்கள் கொண்ட பதிவு எண் வழங்கப்படும்.

No comments:

Post a Comment