Thursday, January 9, 2014

பயன்படுத்தப்படாமல் பாழாகும் அரசு பள்ளி கட்டடம்

பரங்கிப்பேட்டையில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் ஆறு ஆண்டாக பயன்படுத்தப்படாமல், செடிகள் முளைத்து சேதமடைந்து வருகிறது.

சுனாமியின் போது பரங்கிப்பேட்டை பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்தன. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட வந்த ராஜஸ்தான் அரசு அதிகாரிகள், பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் புதிதாக அரசு மருத்துவமனை மற்றும் பள்ளி கட்டடம் கட்டிக் கொடுத்தனர். ராஜஸ்தான் அரசு கட்டிக்கொடுத்த புதிய கட்டடத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது.
வண்டிக்கார தெருவில் இயங்கிய அரசு பெண்கள் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிய இடத்திற்கு மாற்றப்பட்டது. அதனால், வண்டிக்கார தெருவில் இயங்கிய அரசு பெண்கள் பள்ளி கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
இதுகுறித்த புகாரின்பேரில், அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னு வண்டிக்கார தெருவில் உள்ள அரசு பெண்கள் பள்ளியை நேரில் பார்வையிட்டார். பயன்படுத்தாமல் உள்ள ஐந்து கட்டடங்களில், வருவாய் அலுவலகம், சம்மந்தத்தில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் வாடகை கட்டடங்களில் இயங்கி வந்த மின்சார அலுவலகம், நூலகம் உள்ளிட்ட அலுவலங்கள் ஒரே இடத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கலெக்டர் மாறுதலாகி சென்ற பிறகு, அதிகாரிகள் அந்த திட்டத்தை கண்டுகொள்ள வில்லை. பெரியக்கடை தெருவில் வாடகை கட்டடத்தில் இயங்கிய நூலகம் மட்டும் இங்கு கொண்டுவரப்பட்டு ஒரு கட்டடத்தில் இயங்கி வருகிறது. மற்ற அலுவலகங்கள் மாற்றப்படாததால், நான்கு கட்டடங்கள் சேதமடைந்து வீணாகி வருகின்றன. கட்டடத்தில் உள்ள தண்ணீர் பைப் லைன்கள் உடைந்தும், மின்சார ஒயர்கள் பல இடங்களில் அறுந்து தொங்குகின்றன.
கட்டடத்தின் மேல் செடிகள் முளைத்து கட்டடங்கள் வீணாகி வருகிறது. முள்செடிகள் அதிகளவில் முளைத்து அந்த பகுதி முழுவதும் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் பல லட்சம் ரூபாய்மதிப்புள்ள பள்ளி கட்டடங்கள் வீணாகி வருகிறது. எனவே, வீணாகி வரும் பள்ளி கட்டடங்களில், வருவாய் அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் மின்சார அலுவலகம் கொண்டு வர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment