Thursday, January 23, 2014

தனியார் பள்ளிகளை குறி வைக்கும் இடைத்தரகர்கள்: அங்கீகாரம் பெற்று தருவதாக வசூல்

அங்கீகாரம் பெறுவதற்காக சில மெட்ரிக் பள்ளிகளில் இடைத்தரகர்கள் பணம் வசூல் செய்வதை தடுத்த நிறுத்தவேண்டும்" என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகார விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக செயல்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டின் துவக்கத்தில் 600 பள்ளிகள் அங்கீகாரம் பெறாத காரணத்தால் மூடப்படலாம் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் மார்ச் வரை "கெடு" விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 230 நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்காத பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இப்பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் இறுதி கட்ட நோட்டீஸ் அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கி தருவதாக கூறி, சிலர் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ் கூறுகையில், "தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிகப்படியான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு சான்றிதழ்களையும் பெறுவதற்கு பல நாட்கள் அலைய வேண்டியுள்ளது. ஒரு சில அதிகாரிகளும் மெத்தனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். 230 பள்ளிகள் அங்கீகாரம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இப்பள்ளிகளிடம் சில சங்க தலைவர்கள், இடைத்தரகர்கள் அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி வசூல் செய்து வருகின்றனர். அந்த பள்ளிகள் பெயர்கள் வெளிப்படுத்த தயாராக இல்லாததால் புகார்கள் பதிவு செய்யாமல் உள்ளனர்" என்றார்.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "பணம் கொடுத்து அங்கீகாரம் பெற முடியாது. இது தெரிந்தும் பணத்தை கொடுக்கும் தனியார் பள்ளிகள் மீதுதான் தவறு உள்ளது. போதிய சான்றிதழ்கள் முறைப்படி கொடுத்தால் எவ்வித சிரமங்கள் இன்றி அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளலாம். புகார்கள் பெறும்பட்சத்தில் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

No comments:

Post a Comment