Sunday, January 19, 2014

கணினி ஆசிரியர் தேர்வு வழக்கு: மறுஆய்வு கோரிய மனுக்கள் தள்ளுபடி

அரசு பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களை வரன்முறை செய்யும் விதமாக, 2010ல், தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்த தேர்வில் சில கேள்விகளுக்கு, சரியான விடைகள் தரப்படவில்லை என புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த, "டிவிஷன் பெஞ்ச்" விடைகள் சரிதானா என ஐ.ஐ.டி., ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டது. "150ல், 20 கேள்விகள், சரி இல்லை" என நிபுணர்கள் அறிக்கை அளித்தனர். அதையடுத்து 20 கேள்விகளை நீக்கி விட்டு, 130 கேள்விகளை மட்டும் கணக்கில் கொண்டு மதிப்பிடுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, "டிவிஷன் பெஞ்ச்" 2012 டிசம்பரில் உத்தரவிட்டது.
அதன்படி, "130 மதிப்பெண்ணுக்கு, 65 மதிப்பெண் எடுத்தவர்கள், தகுதியானவர்கள்" என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி கணினி ஆசிரியர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், "தவறான 20 கேள்விகளை நீக்குவதால், முரண்பாடுகள் ஏற்படும்; கேள்விகளை நீக்குவதற்குப் பதில் இந்த 20 கேள்விகளுக்கும் பதில் அளிக்க முயற்சித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கியிருக்க வேண்டும். எனவே உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும். புதிதாக தேர்வு நடத்த வேண்டும்" என கூறப்பட்டது.
இம்மனுக்களை, நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், சசிதரன் அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' விசாரித்தது. மறுஆய்வு என்ற போர்வையில், மனுக்களை மீண்டும் விசாரிக்க மனுதாரர்கள் விரும்புகின்றனர். புதிதாக தேர்வு நடத்தவோ அல்லது 20 கேள்விகளுக்கு பதில் அளிக்க முற்பட்டவர்களுக்கு மதிப்பெண் வழங்கவோ, உத்தரவிட்டிருக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இந்த வாதங்கள், ஏற்கனவே எழுப்பப்பட்டு, அதை, "டிவிஷன் பெஞ்ச்" மறுத்துள்ளது.
மனுக்களில் பல முகாந்திரங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அப்பீல் மனுக்கள் பைசல் செய்யப்பட்ட பின், மனுதாரர்கள் ஆய்வு நடத்தியிருப்பதை மறு ஆய்வுக்கு முகாந்திரமாக கொள்ள முடியாது. புதிதாக மனுக்களை பரிசீலிக்குமாறு தற்போது முயற்சிக்கின்றனர். மறு ஆய்வு வரம்புக்குள் இதை அனுமதிக்க முடியாது. எனவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment