Tuesday, January 21, 2014

கற்றல் அடைவு நிலை மதிப்பீட்டுத் தேர்வு: மாநிலம் முழுவதும் இன்று துவக்கம்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வி தரத்தை அறிய கற்றல் அடைவு நிலை மதிப்பீட்டுத் தேர்வு இன்று (ஜன., 21) துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் அரசு, நகராட்சி, நலத்துறை உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. 2012-13ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அடைவு சோதனைகளின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டை அறியும் வகையில் சோதனைகள் நடத்தப்படுகிறது.
மொழிப்பாடங்களில் மாணவர்கள் திறன், அடிப்படை கணிதச் செயல்பாடுகளைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றில் பெற்றுள்ள அறிவை கண்டறிந்து கடந்த ஆண்டு முடிவுகளோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்யப்பட உள்ளது. அதன்படி, ஒவ்வொரு வட்டாரத்திலும் 20 பள்ளிகள் வீதம் இன்று (ஜன., 21) துவங்கி 24ம் தேதி வரை இத்தேர்வு நடக்கிறது.
மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் அடைவுத்தேர்வுக்கு பள்ளிக்கு ஒரு கண்காணிப்பாளரும், எட்டாம் வகுப்புக்கு ஒரு பள்ளிக்கு இரண்டு கண்காணிப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வட்டாரத்தில் மூன்றாவது, ஐந்தாவது வகுப்புக்கு பத்து பள்ளிகளும், எட்டாம் வகுப்புக்கு பத்து பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரத்தில் 300 பள்ளிகளில் இந்த அடைவுத்தேர்வு நடக்கிறது.
இன்று மூன்றாம், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத் தேர்வும், நாளை (ஜன., 22) கணிதத்தேர்வும் நடக்கிறது. 23ம் தேதி எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தமிழ், ஆங்கிலமும், 24ம் தேதி காலை கணிதத் தேர்வும் நடக்கிறது.
இப்பயிற்சி குறித்து வட்டார மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான ஆலோசனை கூட்டம் அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் தனசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவிச்சந்திரன், அம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்வு நடத்தும் முறை குறித்து விளக்கப்பட்டது. மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment