Sunday, January 12, 2014

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர், டியூஷன் எடுக்கக் கூடாது; மீறினால், சஸ்பெண்ட் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் எச்சரித்துள்ளார்.

அவரது அறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து, தனி வகுப்பு (டியூஷன்) எடுப்பதாகவும், "டியூஷனுக்கு" வராத மாணவ, மாணவியரிடம், வகுப்புகளில், ஆசிரியர், கடுமையாக நடந்து கொள்வதாகவும், அரசின் கவனத்திற்கு, புகார் வந்துள்ளது.
ஆசிரியர்களின், இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. விழுப்புரம் மாவட்டத்தில், மாணவர்களை கட்டாயப்படுத்தி, சில ஆசிரியர்கள் டியூஷன் எடுத்துள்ளனர். இதனால், மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கல்வித்துறைக்கு புகார் வந்ததை அடுத்து, அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, முறைகேடான செயல்களில் ஈடுபடுவதை, ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும்; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான சுற்றறிக்கையை ஆசிரியர்களிடம் வழங்கி அதில், அவர்களின் கையெழுத்தை பெற்று கோப்பில் பராமரிக்க, தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment