Monday, January 20, 2014

புலியை தேடும் பணியில் தொய்வு: பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

ஊட்டி அருகே, குந்தசப்பை பகுதியில் உலா வந்த புலி, தும்மனட்டி பகுதிக்கு இடம் மாறியுள்ளதாக வந்த தகவலையடுத்து, வனத்துறை தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி தொட்டபெட்டா பகுதியில், 3 பேரை கொன்ற புலி, கடந்த 12 நாட்களாக குந்தசப்பை கிராமத்தில் முகாமிட்டுள்ளது. குந்தசப்பை கிராமத்தில், வீடுகளில் இருந்து ஒரு கி.மீ., சுற்றளவில் புலி நடமாடி கொண்டிருப்பதால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்; பகல் நேரங்களில், புலி கண்ணில் தென்படுகிறதா என "பைனாகுலர்" உதவியுடன் வேடிக்கை பார்க்கின்றனர்.
வனத்துறையினர், மயக்க ஊசி செலுத்தி, புலியை பிடிக்க திட்டமிட்டுள்ளனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 60 கண்காணிப்பு கேமராக்கள், 100 மீ., எல்லைக்குள் அதன் நடமாட்டம் இருந்தால், அதை எஸ்.எம்.எஸ்., மூலம் உணர்த்தும் உபகரணம் (எர்லி வார்னிங் சிஸ்டம்) 6 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
தவிர, ஐதராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இரு தெர்மல் கேமராக்கள் 50 பைனாகுலர் உதவியுடன், புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. புலி அச்சத்தால் இப்பகுதியில் உள்ள 48 பள்ளிகளுக்கு, 7ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; இதனால் பொதுத் தேர்வை எதிர்கொள்ள உள்ள, 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரி பாலமுரளியிடம் கேட்ட போது, "சனிக்கிழமை மற்றும் பிற நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி விடுமுறை ஈடு செய்யப்படும்; இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது" என்றார்.
இந்நிலையில், நேற்று மாலை 5:30 மணிக்கு, குந்தசப்பை பகுதியில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ள தும்மனட்டி கிராமத்தில் "புலி" தென்பட்டதாக, கிடைத்த தகவலையடுத்து, வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
புலியை நேரில் பார்த்த மாணவர்: ஊட்டி அருகே குந்தசப்பை பகுதியிலிருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள தும்மனட்டி கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்ற மாணவன் நேற்று புதரில் படுத்திருந்த புலியை பார்த்துள்ளான். இதுகுறித்து பிரவீன் கூறுகையில், "நாங்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த புதருக்குள் பந்து விழுந்தது. பந்தை எடுக்க நான் சென்றபோது, அங்கு புலி படுத்துக் கொண்டிருந்தது. அதன் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது போல் இருந்தது. என்னை பார்த்த புலி எழுந்து நின்றது. நான் பயந்து அலறி, அங்கிருந்து ஓடி வந்து விட்டேன். பிறகு அந்த புலி அங்கிருந்து நகர்ந்து சென்றதையும் பார்த்தேன்" என பதட்டத்துடன் கூறினார்.
இதையடுத்து தும்மனட்டி, தும்மனாடா போன்ற பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டது. பொதுமக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment