Sunday, January 19, 2014

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியுமா?: டி.இ.டி. தேர்வர்கள் கவலை

சான்றிதழ்களில் கல்வி அலுவலர்களின் கையெழுத்து பெற போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் 20ம் தேதி துவங்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாமில் பங்கேற்க முடியுமா என ஆசிரியர் தகுதி தேர்வர் (டி.இ.டி.,) கவலை அடைந்துள்ளனர்.

அழைப்பு கடிதம்
டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்) மற்றும் இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20ம் தேதி முதல் 27 வரை 32 மாவட்டங்களிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டு உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த தகவல் 11ம் தேதி வெளியானது. "தேர்வர் சான்றிதழ்களின் இரு "செட்" நகல்களில் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலரிடம் கையெழுத்து பெற்று வர வேண்டும். தமிழ் வழியில் படித்தவராக இருந்தால், அதற்குரிய சான்றிதழை பெற்று வர வேண்டும்" என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
கல்வி சான்றிதழ் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அலுவலரிடம் கையெழுத்து பெற வேண்டும். பள்ளி சான்றிதழில் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும், பட்ட சான்றிதழில் கல்லூரி முதல்வரிடமும், பல்கலையில் படித்தால் துறை தலைவரோ அல்லது பதிவாளரிடமோ கையெழுத்து பெற வேண்டும். அறிவிப்பு வெளியான பின் 13, 17 ஆகிய இரு நாட்கள் மட்டுமே வேலை நாட்கள். மற்ற நாட்கள் பொங்கல் விடுமுறை. இதனால், சான்றிதழ்களில் கையெழுத்து பெற முடியாமல் தேர்வர்கள் அலைந்து கொண்டு இருக்கின்றனர்.
குறிப்பாக, பல்வேறு பல்கலைகளில் தொலைதூர கல்வி திட்டத்தில் பட்டம் படித்தவர்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கு நேரில் சென்று உரிய அலுவலரிடம் கையெழுத்து பெற வேண்டும். இதற்கு போதிய கால அவகாசம் இல்லை. "தமிழ் வழியில் படித்தவர்கள் அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும்" என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. எந்த அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும் என, தெரிவிக்கவில்லை.
தமிழ் வழி
மேலும் பி.ஏ., தமிழ், எம்.ஏ., தமிழ் படித்தவர்களும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை ஏன் இணைக்க வேண்டும் என, தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர். படித்ததே தமிழ் எனும்போது இந்த பாடம் சம்பந்தப்பட்டவர்களிடம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் கேட்பது சரியல்ல என, தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும் எனவும் உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்றும் டி.ஆர்.பி., அறிவித்திருப்பதால் தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஏன் இந்த கமுக்கம்?
டி.இ.டி., தேர்வு முடிவு தொடர்பான விவரங்களை முழுமையாக வெளியிட டி.ஆர்.பி. தயக்கம் காட்டுகிறது. பட்டதாரி ஆசிரியர் தேர்வு மறு மதிப்பீட்டால் எத்தனை தேர்வர்களுக்கு மதிப்பெண் அதிகரித்தது, முதுகலை ஆசிரியர் திருத்திய தேர்வு முடிவு வெளியீட்டால் எத்தனை தேர்வர் தேர்ச்சி பெற்றனர் என்பது உள்ளிட்ட எந்த விவரங்களையும் டி.ஆர்.பி., வெளிப்படையாக வெளியிடவில்லை.
மேலும், தேர்ச்சி பெற்றவர் விவரங்களை பாட வாரியாக அனைவரும் பார்க்கும் வகையில் முடிவை வெளியிடாமல், தேர்வர் ஒவ்வொருவரும் தனித் தனியாக முடிவை அறியும் வகையில் வெளியிடப்பட்டன. இதனால் டி.ஆர்.பி.,யில் வெளிப்படைத்தன்மை இல்லை என, தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments:

Post a Comment