Sunday, January 12, 2014

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: திருத்தப்பட்ட முடிவுகள் வெளியீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வியாழக்கிழமை (ஜன.9) இரவு வெளியிடப்பட்டுள்ளன.
இதையடுத்து, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின்  www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த பல தேர்வர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது.
போட்டித் தேர்வுக்கான சில முக்கிய விடைகளை மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நவம்பர் 28-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
உயிரியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல், தமிழ்ப் பாடங்களைத் தவிர மீதமுள்ள பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவில் உயிரியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல் பாடங்களைத் தவிர பிற பாடங்களுக்கான முக்கிய விடைகளில் மாற்றங்கள் இருந்தன.
தமிழ்ப்பாட வினாத்தாளில் எழுத்துப் பிழைகள் இருந்ததையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, அந்தப் பாடத்துக்கான விடைத்தாள்கள் தனியாக மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஜன.17-இல் சான்றிதழ் சரிபார்ப்பு: திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளவர்களுக்காக ஜனவரி 17-ஆம் தேதி விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், தங்களது வழக்குகளில் பெற்ற அசல் உத்தரவோடு இதில் பங்கேற்கலாம். ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இயலாதவர்கள், இப்போது இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அவர்களும் பங்கேற்கலாம்.
ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பிலும் பங்கேற்று, திருத்தப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளவர்கள் இதில் பங்கேற்க வேண்டியதில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த ஜூலை 21-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை மொத்தம் 1.60 லட்சம் பேர் எழுதினர்.
இந்தத் தேர்வு முடிந்த பிறகு, பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் பணி நியமனம் பல மாதங்களாக தாமதமாகி வருகிறது.

No comments:

Post a Comment