Wednesday, January 15, 2014

பொங்கல் தினத்தில் இயங்கிய பள்ளி முற்றுகை

பொங்கலுக்கு விடுமுறை விடாமல் வகுப்பு நடத்திய கோத்தகிரி சி.எஸ்.ஐ., பள்ளியை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மிஷன்ஸ் காம்பவுண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ., அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
பொங்கலை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இந்த பள்ளியில் பிளஸ்-2 மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் காலையிலேயே மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்து வகுப்பறையில் அமர்ந்திருந்தனர்.
தகவலறிந்த இந்து முன்னணியினர், மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் காலை 11:00 மணிக்கு பள்ளிக்கு சென்றனர். நிர்வாகிகளிடம், "அரசு பொங்கல் விடுமுறை அளித்துள்ள நிலையில், மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது நியாயமில்லை; மாணவர்கள் பொங்கல் கொண்டாட வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" என கூறியுள்ளனர். இதனை பள்ளி நிர்வாகம் ஏற்கவில்லை.
ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோத்தகிரி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு வந்து பேச்சு நடத்தினர். அப்போது, "மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும்" என இந்து அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அனைவரும் குதூகலத்துடன் வீடுகளுக்கு பொங்கல் கொண்டாட சென்றனர்.
இந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகையில், "தமிழர் பண்டிகையை இது அவமதிக்கும் செயல், அரசு விடுமுறை அளித்தும், அதனை மீறும் வகையில் நடந்து கொண்ட பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

No comments:

Post a Comment