Monday, November 10, 2014

இளம் விஞ்ஞானி ஆராய்ச்சி படிப்புக்கு தேர்வான 14 வயது ஏழைப் பள்ளி மாணவன்!

ட்டடை அகற்றும் இயந்திரம், நடைமேடை மின்சார உற்பத்தி கருவி, பிளாஸ்டிக் வீடு... என புதிய கண்டுபிடிப்புகளை, பெரியகுளம் அருகே வடுகபட்டி மாணவன் யோகேஷ், 14, உருவாக்கியுள்ளார். இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் இளம் விஞ்ஞானி ஆராய்ச்சி படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.

தேனி மாவட்டம் வடுகபட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன்; சுமை துாக்கும் தொழிலாளி. மனைவி சுப்புலட்சுமி வீட்டு வேலைகளை செய்கிறார். இவர்களது மகன் யோகேஷ், வடுகபட்டி வேளாளர் நடுநிலைப்பள்ளியில் படித்து, தற்போது அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.
கண்ணீர் கொட்டியது: இரண்டு ஆண்டுகளுக்கு முன், பத்து வீட்டில் பாத்திரம் தேய்த்து, பத்து விரல்களும் காய்ப்பு பிடித்து பிள்ளைகள் படிப்பதற்காக உழைத்துக்கொண்டிருந்த தாய் சுப்புலட்சுமி போர்வைக்குள் முடங்கி கிடந்தார். கண்கள் கசிந்த தாயை பார்த்த யோகேசுக்கு கண்ணீர் கொட்டியது.
வீட்டில் ஒட்டடை அடிக்கும் போது துாசு கண்ணில் விழுந்தது; துாசு எடுத்த பிறகும் கண் உறுத்தலாக இருக்கிறது, என சுப்புலட்சுமி கூறினார். சிகிச்சை அளித்தபோதும் ஒரு மாதம் வரை சுப்புலட்சுமி கண்வலியால் அவதிப்பட்டார். தானியங்கி இயந்திரம் இதன்மூலம் தானியங்கி ஒட்டடை இயந்திரம் தயாரிப்பதற்கான பொறி யோகேசுக்கு தட்டியது. அறிவியல் ஆசிரியர் லட்சுமிநாராயணனிடம் இதை தெரிவித்தபோது பாராட்டி ஊக்குவித்தார். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, சிந்தனை செயல்வடிவம் பெற்றது.
பயன்படுத்திய பொருட்கள்: ஒரு புற உருளை கொண்ட சிறிய அளவிலான மின்மோட்டார், 10 அடி பி.வி.சி., குழாய், பழைய பிளாஸ்டிக் கூடை, 5 மீட்டர் நாடா, 15 வாட்ஸ் பேட்டரி, நுால்கண்டு ரோலர், பிளாஸ்டிக் நார் கொண்டு இதை தயாரித்தார். இதற்கான செலவு 1500 ரூபாயை வேளாளர் பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. மீண்டும் ஒரு முயற்சி இது தவிர, நடந்தால் மின்சாரம் உற்பத்தியாகும் நடை மேடை மின்சார கருவியையும் தயாரித்துள்ளார். இதை தயாரிக்க 1500 ரூபாய் செலவாகும். நடக்கும் அழுத்தத்தைக் கொண்டு பீசோ எலக்ட்ரிக் என்ற விளைவின் மூலம் இதில் மின்சாரம் கிடைக்கிறது.
பிளாஸ்டிக் வீடு
மேற்கூரையில் வேங்கைமரம், நாட்டுக் கருவேலமரம், முருங்கை மரம் ஆகியவற்றின் பிசினை மணலுடன் கலந்து பிளாஸ்டிக் வீடு மாதிரியையும் உருவாக்கி உள்ளார். இந்த வீட்டில் வெப்பம் தாக்காது.தங்கப்பதக்கம்: சில ஆண்டுகளுக்கு முன் மாவட்ட இன்ஸ்பயர் விருது அறிவியல் கண்காட்சி போட்டி தேனியில் நடந்தது. 183 மாணவவர்கள் கலந்து கொண்டனர். இதில், யோகேஷ் முதலிடம் பெற்றார்.திருச்சியில் நடந்த மாநில போட்டியில் 830 பள்ளிகள் கலந்து கொண்டன. அதிலும் யோகேஷ் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். டில்லியில் நடந்த தேசிய போட்டியில் சிறப்பு பரிசு பெற்றார்.ஊக்கம் கொடுத்த ஆசிரியர் லட்சுமிநாராயணன், தலைமை ஆசிரியர் பரமகுருசாமி, உதவி ஆசிரியர் சக்திவேலுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன், என யோகேஷ் தெரிவித்தார்.
இளம் விஞ்ஞானி யோகேஷ் அறிவியல் பட்டப்படிப்பு (இளங்கலை, முதுகலை) படிக்கும்போது, ஆண்டுக்கு 80 ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகையை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. முதுகலை முடித்தவுடன், இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் இளம் விஞ்ஞானி ஆராய்ச்சி படிப்புக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment