Tuesday, November 25, 2014

எம்.பி.ஏ., படிக்க விரும்புகையில்...

எம்.பி.ஏ., சேர நினைக்கும் ஒருவர் என்னென்ன திறன்கள் மற்றும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்கு பிடித்தமான கல்லூரியில் இடம்பிடிக்க நடக்கும் போட்டியில், சிறப்பாக செயல்பட்டு வெற்றிகாண முடியும்.
அது தொடர்பான சில ஆலோசனைகள்.

தேவையான தகுதிகள்
ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், அங்கீகரிக்கப்பட்டதொரு இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதேசமயம் CAT மற்றும் SNAP போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுத, குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களை பட்டப் படிப்பில் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் என்பது கட்டாயம் தேவையில்லை என்றபோதும், அது இருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.
அதேசமயம், ஒரு மாணவரின் முந்தைய கல்வி சாதனைகள், பணி அனுபவம், பல்வேறான கல்விப் பின்னணிகள் ஆகியவற்றுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மேற்கண்ட தகுதிகளுடன், உங்களின் தலைமைத்துவம் மற்றும் மேலாண்மை பண்புகளையும் வெளிப்படுத்தும் ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆர்வமுள்ள அறிவு, பரந்தளவிலான டேட்டாக்களை பகுப்பாய்வு மற்றும் ஒருங்கமைவு செய்யும் ஆற்றல் போன்றவை ஒரு சிறந்த மேலாண்மை மாணவருக்கான அடையாளங்கள். தகவல்தொடர்பு திறன் மற்றும் சமூக திறன்கள் ஆகியவற்றை சோதிப்பதன் மூலமாக ஒரு தரமான மாணவர் தேர்வு செய்யப்படுகிறார்.
நீங்கள் எம்.பி.ஏ.,வில் ஒரு குறிப்பிட்ட துறையை தேர்வுசெய்து செல்ல விரும்பினால், அத்துறை தொடர்பான தனிப்பட்ட திறன்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆர்வமும், தொடர்புடைய திறனும் இல்லாமல், ஒரு ஸ்பெஷலைஸ்டு எம்.பி.ஏ., படிப்பை மேற்கொண்டால், நீண்டகால நோக்கில் உங்களுக்கு அது பயன்தராது.
பட்டப் படிப்பு மதிப்பெண்களுக்கு எந்தளவு வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது?
அந்தந்த கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, இதற்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் மாறுபடுகின்றன. சில கல்வி நிறுவனங்கள் 15% வரையிலும், சில கல்வி நிறுவனங்கள் அதிகபட்சமாக 50% வரையிலும் வெயிட்டேஜ் தருகின்றன.
சில கல்வி நிறுவனங்கள் இதற்கென தனி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் எதையும் தருவதில்லை. ஆனால், அவை வேறு ஒரு நிபந்தனையை வைத்துள்ளன. அதாவது, தமது கல்வி நிறுவனத்தில் சேர விரும்புவோர், தனது இளநிலைப் படிப்பில் குறைந்தபட்சம் 55% அல்லது 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் அது.
அந்த மதிப்பெண்கள் இல்லாதபட்சத்தில்,குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கவே முடியாது. எனவே, எதிர்காலத்தில் எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்புவோர், தங்களின் இளநிலைப் பட்டப் படிப்பை அக்கறையுடனும், ஆர்வத்துடனும் படிக்க வேண்டும். ஏனெனில், அது எதிர்பாராத நேரங்களில் உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கும்.
மேலும், நேர்முகத் தேர்வின்போது அந்த மதிப்பெண்கள் உங்களின் வாய்ப்புகளை அதிகரிக்கும். பல மேலாண்மை கல்வி நிறுவனங்களில், CAT மதிப்பெண்களுக்கு 30% முதல் 50% வரை வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
நேர்முகத் தேர்வுக்கு தயாராதல்
நேர்முகத் தேர்வில் 4 வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவை,
* உங்களைப் பற்றிய தனிப்பட்ட விபரங்கள்
* உங்களின் கல்விப் பின்புலம்
* உங்களின் பணி அனுபவம்
* பொதுவான கேள்விகள் (நடப்பு நிகழ்வுகள் முதல் பொதுஅறிவு வரை)
உங்களிடம் சற்று எதிர்பார்க்காத கேள்விகளும் கேட்கப்படலாம். நீங்கள் இளநிலைப் படிப்பில் படித்த விஷயங்களை, நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன்பாக சற்று Revision செய்து செல்வது நன்று.
உங்களுக்குப் பிடித்தமான துறையில் பல கூடுதல் விஷயங்களை தெரிந்து வைத்துக்கொள்வது நன்று. ஏனெனில், அதிலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்படலாம். மேலும், நீங்கள் தற்போது பணிபுரியும் அல்லது முன்பு பணிசெய்த நிறுவனம் பற்றிய சில முக்கிய மற்றும் தேவையான விபரங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், அந்த நிறுவனத்தில் உங்களின் பணி நிலை மற்றும் பணியின் தன்மைகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்படும். இதுதொடர்பான உங்களின் பதில்கள் கூர்ந்து கவனிக்கப்படும்.
இத்தகைய கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது, சுற்றி வளைத்துப் பேசி தடுமாறாமல், நேரடியாகவும், தெளிவாகவும் பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கான கேள்வி கேட்கப்பட்ட பின்னர், சில வினாடிகள் எடுத்துக்கொண்டு அதைத் தெளிவாகப் புரிந்து, பின்னர் சரியான பதிலைக் கூறவும்.

No comments:

Post a Comment