Sunday, November 30, 2014

பாரதியார் பிறந்த நாளையும், நாடு முழுவதும் கொண்டாட நடவடிக்கை: ஸ்மிருதி இரானி

திருவள்ளுவரை தொடர்ந்து, பாரதியார் பிறந்த நாளையும், நாடு முழுவதும் அரசின் சார்பில் கொண்டாட, நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி.,யான தருண் விஜய், நேற்று முன்தினம், ராஜ்யசபாவில் பேசும்போது, திருவள்ளுவர் பிறந்த நாளை, நாடு முழுவதும் கொண்டாட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.
அவர் பேசி முடித்த தும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுந்து, தருண் விஜய்யின் கோரிக்கை ஏற்கப்படுகிறது என, சபையிலேயே வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு நன்றி தெரிவிக்க, அவரின் அமைச்சகத்திற்கு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தருண் விஜய் எம்.பி., ஆகியோர் வந்தனர். அவர்களுடன், டில்லி தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த, நிர்வாகிகள் சிலரும் வந்திருந்தனர். அனைவரும், அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, மலர்கொத்து அளித்து, தங்களது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.
பின், நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: திருவள்ளுவர் பிறந்த நாளை, அரசு சார்பில் கொண்டாடுவது என்பது பெருமைக்குரியது. நாடு முழுவதும், திருவள்ளுவர் பிறந்த நாளை கொண்டாட தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு மேற்கொள்ளும்.
திருக்குறளை, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி பெயர்த்து, அவற்றை நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். இதேபோல, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மகாகவியாக அறியப்பட்டவருமான பாரதியாரின் பிறந்த நாளையும், மத்திய அரசின் சார்பில், தேசிய விழாவாக, நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். இவ்வாறு, ஸ்மிருதி இரானி கூறினார்.

No comments:

Post a Comment