Wednesday, November 5, 2014

அடுத்தாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்?

அடுத்தாண்டு முதல், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ஒரு கல்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இதுகுறித்து கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு விரைவில் தொடங்கும். கல்விக் கொள்கையில், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் மட்டுமே பங்களித்தால் போதாது, பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கெடுக்க வேண்டும்.
இந்த நாட்டின் தலைவிதி, நெடுங்காலமாக, அரசியல் செய்தோரிடம் சிக்கிக் கொண்டிருந்தது. இப்போதுதான், அது விடுதலையடைவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
கல்வித் தொடர்பான மாற்றம் என்பது ஒரு அரசில் மட்டுமே நிகழ்ந்துவிடாது. அது அடிமட்ட அளவிலும் நிகழ வேண்டும் மற்றும் மாற்றத்தைக் கொண்டுவரும் வாகனங்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அந்த நிகழ்ச்சியில், பள்ளிகளில், முழுமையான சுய-மதிப்பாய்வை மேற்கொள்ளும் வகையிலான, சரன்ஷ் என்ற அம்சத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த அம்சத்தின் மூலம், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள், பெரிதும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment