Friday, November 7, 2014

பள்ளி பாட புத்தகம் மாயமான வழக்கில் முதன்மை கல்வி அலுவலக பதிவு எழுத்தர் சஸ்பெண்ட்

கோவையில், 350 டன் பள்ளி பாட புத்தகம் மாயமான வழக்கில், முதன்மை கல்வி அலுவலக பதிவு எழுத்தர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்க, 2011ம் ஆண்டு, சமச்சீர் கல்வி அல்லாத 350 டன் பழைய பாட திட்ட புத்தகங்கள் மாயமாகின. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், பாட புத்தகங்கள் மாயமானதில், முறைகேடு நடந்ததை கண்டுபிடித்தனர்; சி.இ.ஓ., ராஜேந்திரன், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் தரப்பட்டது. இதன்படி, முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், இளநிலை உதவியாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். இச்சூழலில், போலீசார் விசாரணையில் மாவட்ட கல்வி அலுவலக பதிவு எழுத்தர், சேதுராமலிங்கம் தவறு செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் அளித்தனர். அதன்படி, நேற்று முன்தினம், பதிவு எழுத்தர் சேதுராமலிங்கம், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மாயமானது எங்கே?: மாயமானதாகக் கருதப்படும் 350 டன் பாட புத்தகங்கள், விடுமுறை நாட்களில் லாரிகள் மூலம், சிவகாசி கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இதன்மூலம் கிடைத்த பணத்தில் லாபம் அடைந்தவர்கள் யார் என்பது குறித்தும், அதிகாரிகளுக்கான தொடர்புகள் குறித்தும் தொடர்ந்து, குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment