Wednesday, November 5, 2014

ஆபத்தான வகுப்பறைகள், கட்டடங்களை பயன்படுத்த கல்வித்துறை தடை!

மதுரை மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகளில், ஆபத்தான நிலையிலுள்ள வகுப்பறைகள், கட்டடங்களை பயன்படுத்த கல்வித்துறை தடை விதித்தது.
வடகிழக்கு பருவமழை தற்போது துவங்கியுள்ளது. மேலும் அவ்வப்போது தாழ்வழுத்தம் காரணமாக புயல் உருவாகியும் மழை பெய்கிறது. மழை மற்றும் வெள்ளச் சேதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மதுரையில் பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அரசு பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள வகுப்பறைகள், கட்டடங்களை கணக்கெடுக்க கல்வி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
தொடக்கப் பள்ளிகளின் வகுப்பறைகள் மற்றும் கட்டடங்கள் குறித்து துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், சுவர்களில் கீறல், விரிசல் மற்றும் உடைந்த ஓடுகள் உள்ள நிலையில் 69 வகுப்பறைகள் மற்றும் கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் நடந்த ஆய்வில் 9 கட்டடங்கள் பாதுகாப்பில்லாதவை என தெரிந்தது. இவற்றின் பட்டியல் ஊராட்சி ஒன்றிய கமிஷனர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறியதாவது: மழை மற்றும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில், 78 வகுப்பறைகள் மற்றும் கட்டடங்கள் பாதுகாப்பில்லாதவை என உறுதி செய்யப்பட்டது.
பொதுப்பணித்துறைக்கு இப்பட்டியல் அனுப்பியுள்ளோம். அதை பராமரிப்பதா அல்லது இடிப்பதா என துறை அதிகாரிகள் முடிவு செய்வர். தற்போது அவற்றை பயன்படுத்தாமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment