Sunday, November 23, 2014

சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க முடியாது மந்திரி ஸ்மிரிதி இரானி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க முடியாது என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்து உள்ளார்.


மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 3-வது மொழியாக தற்போது மாணவர்கள் பயின்று வரும் ஜெர்மன் மொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தை புகுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மத்திய அரசின் இந்த முடிவை ரத்து செய்யுமாறு, ஜி20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் நரேந்திர மோடியிடம், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலும் வேண்டுகோள் விடுத்தார்.

சமஸ்கிருதத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தளர்த்தியுள்ளது. அதன்படி சமஸ்கிருதம் அல்லது ஏதாவது ஒரு இந்திய மொழியை படிக்கலாம் என அறிவித்தது.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3-வது மொழியாக ஜெர்மன் மொழியை பயிற்றுவிப்பதற்கு கடந்த 2011-ம் ஆண்டு ஜெர்மனியுடன் போடப்பட்ட ஒப்பந்தம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இந்த ஒப்பந்தம் எந்த அடிப்படையில் போடப்பட்டது என்பதை கண்டுபிடிக்க ஏற்கனவே விசாரணை நடந்து வருகிறது. இந்த பள்ளிகளுக்கான 3 மொழி கோட்பாடு தெளிவாக உள்ளது. அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 23 இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை 3-வது மொழியாக மாணவர்கள் எடுத்து படிக்கலாம். அதன்படி இந்த பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க முடியாது.

நாங்கள் பிரெஞ்சு மொழியை கற்பிக்கிறோம். சீன மொழியை கற்பிக்கிறோம். அந்தவகையில், வெளிநாட்டு மொழியாக ஜெர்மன் மொழியும் தொடர்ந்து கற்பிக்கப்படும் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் ஆற்றி வரும் சிறந்த பணிகளில் இருந்து என்னை திசை திருப்புவதற்காகவே, நான் ஆர்.எஸ்.எஸ்.சின் சின்னம் அல்லது பிரதிநிதி என்று கூறுகிறார்கள். யார் என்ன கூறினாலும், என்னுடைய பணிகளில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். என்றார்.

No comments:

Post a Comment