Tuesday, November 25, 2014

கோவை மாவட்டத்தில் மாதாமாதம் 2 லட்சம் ஊட்டச்சத்து மாத்திரைகள் வினியோகம்

அரசு உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்சம் ஊட்டச்சத்து மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக, பல்வேறு உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்தது. தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறையும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு அரசு உத்தரவின்படி, ஊட்டச்சத்து மாத்திரை வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, தமிழகம் முழுவதும், 2013 கல்வியாண்டு நவ., முதல், 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் வைத்து, வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று மாணவ, மாணவிகள் மதியம் சாப்பிட்ட பிறகு, ஆசிரியர்கள் முன், அயர்ன் ஹோலிக் ஆசிட் சப்ளிமென்டேஷன் என்கிற இரும்பு சத்து மாத்திரை வழங்கப்படுகிறது.
இந்த மாத்திரை சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு ரத்த சோகை தவிர்க்கப்படுவதுடன், மாணவ, மாணவிகள் ஆரோக்கியமாக இருப்பர்; சோர்வுகள் நீங்கும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர். பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கண்காணிப்பில், மாத்திரைகள் வழங்கப்படுவதுடன், மாணவர்கள் மாத்திரைகள் உட்கொள்வது சார்ந்த, தகவல்களும் பதிவு செய்யப்படுகிறது. இதை, சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுசெய்து வருகின்றனர்.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், "இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோவையில், ஒவ்வொரு மாதமும், இரண்டு லட்சம் ஊட்டச்சத்து மாத்திரைகள் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த நவ., மாதம் முதல் தற்போது வரை, 24 லட்சம் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன" என்றார்.
மேலும், ஆறு மாதத்துக்கு ஒருமுறை மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வகை பூச்சி மருந்து மாத்திரைகளும், மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் வைத்து வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment